| ADDED : நவ 20, 2025 05:09 AM
திருப்பூர்: திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று இ-மெயிலில், வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையறிந்த, திருப்பூர் மாநகர வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாயுடன் அனைத்து தளங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆக. 28ம் தேதி இதேபோல் மிரட்டல் வந்த நிலையில், தற்போது, இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. போலீசார் கூறியதாவது: இ-மெயில் வாயிலாக, கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காலை, 10:30 மணியளவில், பத்து இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடிக்க உள்ளதாகவும், உடனடியாக அனைவரும் வெளியேற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக சோதனை செய்த போலீசார் எதையும் கண்டுபிடிக்கவில்லை. புரளி என்பது தெரிந்தது. கடந்தமுறை ரஷ்யன் சர்வரில் இருந்து மெயில் அனுப்பபட்டது. தற்போது, 'டார்க் வெப்'பில் இருந்து அனுப்பியுள்ளனர். இதனை கண்டறிவதில் பல்வேறு சிக்கல் உள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.