மேலும் செய்திகள்
'விவசாயிகளுக்கு தனி அடையாள எண்'
13-Feb-2025
திருப்பூர்; விவசாயிகளின் நில உடமை விவரங்களை பதிவு செய்து, அடையாள எண் வழங்குவதற்கான முகாம், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றுவருகிறது.மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு சாகுபடிக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மத்திய அரசு உத்தரவுப்படி, விவசாயிகளின் பெயர், நிலம் தொடர்பான விவரங்கள், 'கிரெய்ன்ஸ்' என்கிற மொபைல் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக வேளாண்துறை சார்பில், பயிர் சாகுபடி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 'பார்மர்ஸ் ரெஜிட்டரி' என்ற பெயரில் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அடையாள எண் வழங்கப்பட்டுவருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், 1.75 லட்சம் விவசாய நில உரிமையாளர்கள் உள்ளனர். இந்த பதிவு எண்ணை கொண்டுதான் வரும் காலங்களில் மத்திய, மாநில அரசு வழங்கும் சலுகைகளின் விவசாயிகள் பயன்பெற முடியும். விவசாயிகள், நில உடமை பதிவுகளை பதிவேற்றம் செய்து, அடையாள எண் பெறவேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.அனைத்து கிராமங்களிலும், நில உடைமை பதிவு செய்து விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது; வரும் 19ம் தேதி வரை இம்முகாம்கள் நடைபெறுகின்றன.ஆதார் கார்டு, நில பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல்போனை கொண்டுசென்று, முகாமில் பதிவு செய்யவேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்புகொள்ளலாம்.
13-Feb-2025