திட்டமின்றி கட்டப்பட்ட கால்வாய்; திக்குத்தெரியாமல் தேங்கும் கழிவுநீர்
பல்லடம்: கரைப்புதுார் கிராமத்தில், திட்டமின்றி கட்டப்பட்ட கால்வாயால், கழிவுநீர் தேங்கி நின்று பாதிப்பு ஏற்படுத்தி வருவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல கடந்த, 2022ல், பல லட்சம் ரூபாய் செலவில் கால்வாய் அமைக்கப்பட்டது. உரிய திட்டமிடல் இன்றி கட்டப்பட்ட கால்வாயால் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அப்பகுதியினர் கூறியதாவது:ரோட்டின் கிழக்குப்பகுதி ஓடை வழியாக கழிவுநீர் செல்லும் வகையில் வாட்டம் உள்ளது. ஓடையுடன் கால்வாயை இணைத்து ஓடையை துார்வாரி இருந்தால், கழிவுநீர் தடையின்றி சென்றிருக்கும்.இதுகுறித்து பொதுமக்கள் தெரியப்படுத்திய பின்னும், அலட்சியம் காட்டிய ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள், ஆய்வு மேற்கொள்ளாமலும், உரிய திட்டமிடல் இன்றியும், பல லட்சம் ரூபாய் செலவில் கால்வாயை கட்டி முடித்தனர். கால்வாய் பயன்பாட்டுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கழிவுநீர் செல்ல வழி இல்லை. இங்குள்ள ஓடையின் மற்றொரு பகுதி, தனியார் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.இதேபோல், தரைமட்ட பாலத்தின் உட்புறமும், தண்ணீர் செல்ல முடியாத வகையில் கற்கள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கழிவுநீர் செல்ல வழி இல்லாததால், ஓடையில் இருந்து வரும் கழிவு நீரும் சேர்ந்து, கால்வாயில் தேங்கி நிற்கிறது.தற்போது, மழை பெய்து வரும் நிலையில், மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து, குடியிருப்பு பகுதி மற்றும் விளை நிலங்களுக்குள் நுழைகின்றன. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஓடை வழியாக கழிவு நீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சீரமைப்பது வீண் வேலைதிட்டமின்றி கட்டப்பட்ட கால்வாயால், ஏற்கனவே பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்ட நிலையில், தற்போது, மீண்டும் இதை சீரமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது வீண் வேலை என்பதால், ஓடையை துார்வாரி கழிவு நீரை கொண்டு செல்வதே சரியாக இருக்கும் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.