உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராப்ட் காகிதத்துக்கு வரியை குறைக்கணும்! அட்டை பெட்டி உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு

கிராப்ட் காகிதத்துக்கு வரியை குறைக்கணும்! அட்டை பெட்டி உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு

திருப்பூர்; கிராப்ட் காகிதம் மீதான வரி, 12 ல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அட்டை பெட்டி உற்பத்தியாளர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது; மூலப்பொருளுக்கான வரியை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் மாவட்டங்களில், மொத்தம், 500 அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களில், உணவுப்பொருள், ஆயத்த ஆடை, ஆட்டோமொபைல் என பல்வேறு துறை பயன்பாட்டுக்கான அனைத்து அட்டைபெட்டி ரகங்கள் தயாரிக்கப்படுகிறது. பிரதான மூலப்பொருளான கிராப்ட் காகிதம் விலை, திடீரென உயர்ந்து, அட்டை பெட்டி உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சி அளிப்பது வழக்கமானதாக உள்ளது. இந்நிலையில் தற்போது, கிராப்ட் காகிதத்துக்கான ஜி.எஸ்.டி., வரி, உயர்த்தப்பட்டுள்ளதால், அட்டை பெட்டி உற்பத்தியாளர்களுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. கடந்த 22ம் தேதி நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 56 வது கூட்டத்தில், வரி விகிதங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி., வரி விகித அடுக்கானது, நான்கிலிருந்து இரண்டு அடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. 12 மற்றும் 28 சதவீத வரிகள் நீக்கப்பட்டுள்ளன. 5 மற்றும் 18 சதவீதம் என்கிற இரண்டு அடுக்குகளை கொண்ட சீரமைக்கப்பட்ட வரி, வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஜி.எஸ்.டி., கவுன்சிலின் இந்த வரி சீரமைப்பு நடவடிக்கை, நாடு முழுவதும், பல்வேறு தொழில் துறையினருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அதேநேரம், கிராப்ட் காகிதத்துக்கு நடைமுறையில் உள்ள 12 சதவீத வரி, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பெரும் நிதிச்சுமை இது குறித்து, தென்னிந்திய அட்டைபெட்டி உற்பத்தியாளர் சங்க (கோவை மண்டலம்) தலைவர் சிவக்குமார் கூறியதாவது: மூலப்பொருளான கிராப்ட் காகிதம் மற்றும் அட்டை பெட்டிக்கு 12 சதவீதம் என்கிற சமமான ஜி.எஸ்.டி., வரி விகிதம் இருந்ததால், அட்டை பெட்டி உற்பத்தியாளர்களுக்கு, இதுவரை வரியால் எந்த பிரச்னையும் ஏற்படாமலிருந்தது. ஆனால் தற்போது, கிராப்ட் காகிதம் மீதான வரி, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அட்டை பெட்டிக்கான வரியோ, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மூலப்பொருளுக்கும், உற்பத்தி பொருளுக்கும் இடையே வரி சமச்சீரின்மையால், அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய பிரச்னை உருவாகியுள்ளது. அட்டைபெட்டி நிறுவனங்களின், 13 சதவீத வரித்தொகை, அரசிடம் தேக்கமடையும். இதனை விண்ணப்பித்து, ரீபண்ட் பெறுவதென்பது அவ்வளவு சுலபமல்ல; மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இது, அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்களின் நடைமுறை முதலீட்டை அதிகரிக்கச் செய்யும். அட்டை பெட்டி நிறுவனங்களை பொருத்தவரை, குறு, சிறு, நடுத்தர நிலையிலேயே உள்ளன. வரி மறுசீரமைப்பு, அட்டை பெட்டி உற்பத்தியாளர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிசீலனை செய்து, கிராப்ட் காகிதத்துக்கான வரியை 5 சதவீதமாக குறைக்கவேண்டும்; அட்டை பெட்டி உற்பத்தி துறையினரின் சிரமங்களை போக்கவேண்டும். இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சரிடம், மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி