சென்னை ரயில்கள் திடீர் ரத்து; பயணிகளுக்கு உதவி மையம்
திருப்பூர்; சென்னையில் இருந்து பெங்களூருக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே தீவிபத்துக்குள்ளானது. ஐந்துக்கும் மேற்பட்ட பெட்டிகளில் மளமளவென பரவிய தீயை கட்டுப்படுத்த, நான்கு மணி நேரத்துக்கு மேலானது.சென்னை - அரக்கோணம் மெயின் வழித்தடத்தில் விபத்து நேரிட்டதால், சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை வரும் வந்தே பாரத், சதாப்தி, கோவை, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.கோவையில் இருந்து சென்னைக்கு புறப்படும் ரயில்களின் இயக்கமும் சேலம், காட்பாடி வரை குறைக்கப்பட்டது.ரயில் விபத்து ஏற்பட்டவுடன் இது குறித்து திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வரும் பயணிகளுக்கு தெரிவிக்க உதவி மையம் உடனடியாக திறக்கப்பட்டது.தகவல் பலகையில் ரயில் ரத்து, இயக்கம் மாற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. டிஜிட்டல் ஸ்கிரீனிலும், ரயில்கள் ரத்து விபரம் ஒளிபரப்பப்பட்டது.