| ADDED : நவ 20, 2025 05:08 AM
பொங்கலுார்: திருப்பூர், தாராபுரம் ரோடு, பொங்கலுார்,செங்காட்டுப்பாளையம் பிரிவு அருகே வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு இளைப்பாறவும், குளிக்கவும் நெடுஞ்சாலை துறை சார்பில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நெடுந்தொலைவு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனை பயன்படுத்தி, கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை அங்கு நிறுத்துகின்றனர். பின் நள்ளிரவு நேரத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் கோழிக் கழிவுகளை கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அவ்வழியாக ரோட்டில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் இங்கு குப்பை கொட்டாதீர். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அதனை யாரும் பொருட்டாக மதிப்பதில்லை. முறைகேடாக கோழிகழிவுகளை ரோட்டோரத்தில் கொட்டும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.