சுகாதார பணியில் சுணக்கம் நகராட்சி கவுன்சிலர்கள் புகார்
திருப்பூர்: காங்கயம் நகராட்சி பகுதியில், குப்பை அகற்றுவது, கால்வாய் சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளில் சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.காங்கயம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. இதில், பங்கேற்று பேசிய வார்டு கவுன்சிலர்கள் பலரும், தங்கள் வார்டு பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது; குப்பை அகற்றும் பணியில் பெரும் தேக்கம் நிலவுகிறது எனத் தெரிவித்தனர்.மேலும், பொது இடங்களில், பாலிதீன் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது; கழிவு நீர் சாக்கடை கால்வாய்கள், துார் வாரி சுத்தம் செய்யப்படாமல், கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசு உற்பத்தி, துர்நாற்றம், தொற்று நோய் பரவும் அபாயம் ஆகியன உள்ளது என்றும் தெரிவித்தனர்.