உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகரத் துாய்மை சாத்தியம்: அனைவரும் கைகோர்ப்போம்

மாநகரத் துாய்மை சாத்தியம்: அனைவரும் கைகோர்ப்போம்

பாலிதீன், புழக்கத்திற்கு வராத காலம் அது; வீட்டில் உருவாகும் குப்பைகள் அப்படியே உரமாகும். ஆனால், இன்றைக்கு அப்படியா? குப்பைகள் பல வகை; சுருக்கமாகச் சொன்னால், மக்கும் மற்றும் மக்காத குப்பை. திருப்பூரில் நிலவும் குப்பைப்பிரச்னைக்கு அடித்தளம்: மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்துக்கொடுப்பதில்லை என்பதுதான். மிஞ்சிய உணவு, காய்கறிக்கழிவு, காய்ந்த பூ, இலை உள்ளிட்டவை மக்கிவிடும். பிளாஸ்டிக் கவர், பாட்டில்கள், கார்டுபோர்டு உள்ளிட்டவை மக்காதவை; ஆனால், மறுசுழற்சிக்குரியவை. மக்கும் - மக்காதவை என வீட்டிலேயே பிரித்துக்கொடுத்துவிட்டால், துாய்மைப்பணியாளர்களுக்கு பணி எளிதாகும். இதுதவிர கண்ணாடி பாட்டில்கள், ஜாடி, உடைந்த கண்ணாடி; டின், அலுமினியம்; பழைய மொபைல்போன், சார்ஜர், பேட்டரி, ரிமோட், டிவி எனத் துவங்கி மின்னணுக்கழிவுகள்; பெயின்ட், ரசாயனம்; மருத்துவக்கழிவு என இந்தப்பட்டியலில் அடங்காத குப்பைகளும் இருக்கின்றன. இவற்றில் ஆபத்தானவையும், உடல்நலனுக்குத் தீங்கு விளைவிப்பவையும் அதிகம் இருக்கின்றன. விழிப்புணர்வு மட்டும் போதுமா? திருப்பூரில், ஒரு வார்டு அளவில் கூட, மக்கும் - மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து வாங்கும் முயற்சி முழுமை பெறவில்லை. இன்னும் விழிப்புணர்வு என்ற அளவிலேயே முனைப்பு நின்றுவிடுகிறது. குப்பைகளை வீட்டில் தரம் பிரித்து எதற்குத் தர வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள், துாய்மைப்பணியாளர்களிடம் முட்டி மோதுவதையும் கண்கூடாக இங்கு பார்க்க முடிகிறது. 'எதற்கு வம்பு' என்று அவர்களிடம் அப்படியே குப்பைகளை துாய்மைப்பணியாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். குப்பைகளைத் தரம் பிரித்து தர வேண்டியது கடமை மட்டும் அல்ல; பொதுமக்களின் பொறுப்பும்கூட. இதைக் கண்டிப்பாக அமலாக்கியே ஆக வேண்டிய நெருக்கடியில் மாநகராட்சி இருக்கிறது. மக்கும் குப்பைகள் எப்படிப் பயனுள்ளதோ, அதேபோல், மக்காத குப்பைகளைக் காசாக்க முடியும். ஆனால், தரம் பிரிப்பே துவங்காதபோது, இதற்கான சாத்தியங்களுக்கும் முற்றுப்புள்ளி விழுந்துவிடுகிறது. குப்பைக்கிடங்கா கிராமங்கள்? மாநகராட்சியின் குப்பைக்கிடங்காக கிராமங்கள்தான் கிடைத்தனவா? இதனால்தான், கிராம மக்கள் கொதித்தெழுந்து போராட்டங்களைத் துவங்கிவிடுகின்றனர். ஏனெனில் குப்பைகளை விஞ்ஞானப்பூர்வ முறையில் கையாள்வதில்லை. இதனால், பசுமையுடன் திகழும் கிராமங்களும், சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாவதை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுள்ள திருப்பூரில், குப்பை விவகாரம் மட்டும் ஏனோ தானோவென்று கையாளப்படுகிறது. ஆட்சியாளர்கள் மாறினாலும், காட்சிகள் மட்டும் மாறவில்லை. பாறைக்குழிகளில் கொட்டுவது என்ற ஒற்றைத்தீர்வை மட்டும் வைத்துக்கொண்டு, குப்பைகளை நவீனமாகக் கையாள்வதாகச் சொல்லிக்கொள்கிறது, மாநகராட்சி நிர்வாகம். அறிவியல்பூர்வமாக குப்பைகளைக் கையாளப்போவதாக அறிவிப்பு மட்டும் வெளியாகிறதே ஒழிய, இதற்கான நடவடிக்கைகள் மட்டும் நகர்வதில்லை. அடித்தளமிடுவோம் மாநகராட்சி நிர்வாகத்துடன் பொதுமக்களும், தன்னார்வலர்களும் கைகோர்க்க வேண்டிய நேரம் இது. குப்பைகளைக் கையாள்வதை இயக்கமாக நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு வார்டிலாவது முன்மாதிரியாக குப்பை தரம் பிரிப்பு, நவீன முறையில் குப்பை கையாளுதல் போன்றவற்றைக் கையாண்டு, துாய்மையான மாநகரம் உருவாவதற்கான அடித்தளமிட வேண்டும். கிராமங்களையும், மாசுபடுதலில் இருந்து காப்பாற்ற வேண்டும். - துாய்மையாளன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !