ஒரு மழைக்கே குளமான நகர ரோடுகள் போக்குவரத்து பாதிப்பு; வாகனங்கள் தவிப்பு
உடுமலை; உடுமலையில், பல மாதங்களுக்கு பின் நேற்று மழை பெய்த நிலையில், மழை நீர் வடிகால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக, பிரதான ரோடுகளில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதித்தது. உடுமலையில், மூன்று மாதங்களுக்கு பின் நேற்று மாலை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால், பிரதான ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு, தளி ரோடு, பைபாஸ் ரோடுகளில், மழை வெள்ள நீர் ஓடியது. இந்த ரோடுகளில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில், மழை வெள்ள நீரின் உச்ச அளவை கணக்கிட்டு, தேவைக்கு ஏற்ப, மழை நீர் வடிகால்கள் அமைந்துள்ளன. ஆனால், பிரதான ரோடுகளிலுள்ள மழை நீர் வடிகால்கள் முழுவதும், கடைகள், வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, கான்கிரீட் சிலாப்கள் அமைத்து, மூடப்பட்டுள்ளன. மேலும், கடைகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை, கழிவுகளும் அப்படியே, மழை நீர் வடிகால்களுக்கும் வீசப்பட்டு, சீரழிக்கப்பட்டுள்ளது. அதே போல், காந்திநகர், அண்ணா குடியிருப்பு, ராமசாமி நகர் என நகரின் பிரதான குடியிருப்பு பகுதிகளிலும், புதர் மண்டி காணப்படும் மழை நீர் வடிகால்கள், ஆக்கிரமிப்புகள் காரணமாக ரோடுகளில் மழை வெள்ள நீர் ஓடியது. இதனால், நேற்று ஒரு மணி நேரம் பெய்த கன மழையின் போது, மழை நீர் செல்ல வழியின்றி ரோடுகளில் பல அடி உயரத்திற்கு வெள்ளம் ஓடியது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து, ரோடுகளில் ஓடியதால், துர்நாற்றம் ஏற்பட்டது. ஆண்டு மழை பொழிவில் அதிக, மழை கொடுக்கும் வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மழை நீர் வடிகால்களை மீட்கும் பணியில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி சுகாதாரப்பிரிவு சார்பில், ஒரு சில பகுதிகளில் மழை நீர் வடிகால்கள் துார்வரும் பணி மேற்கொண்டாலும், பிரதான ரோடுகளில், மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், துார்வாருவதிலும் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகின்றனர். இதனால், கழிவு நீர் தேங்கி, கொசு உற்பத்தி, சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, மழை காலங்களில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, கடை உரிமையாளர்களும் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, மழை நீர் வடிகால்களை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், பாரபட்சமின்றி, மழை நீர் வடிகால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு, கான்கிரீட் சிலாப்கள், படிகள் ஆகியவற்றை பாரபட்சமின்றி அகற்றவும், முழுமையாகவும் துார்வார வேண்டும். மேலும், பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள் மழை நீர் வடிகால்களில் வீசப்படுகிறது. இதனால், மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் விழிப்புணர்வுடன், பிளாஸ்டிக், திரவ கழிவுகள் மழை நீர் வடிகால்களில் வீசுவதை தடுக்க வேண்டும்.