உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழைநீர் சேகரிப்பை உறுதி செய்யுங்கள் கிராமசபா கூட்டத்தில் கலெக்டர் அட்வைஸ்

மழைநீர் சேகரிப்பை உறுதி செய்யுங்கள் கிராமசபா கூட்டத்தில் கலெக்டர் அட்வைஸ்

பல்லடம்: புதிதாக கட்டப்படும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா என்பதை உறுதி செய்த பின்பே அனுமதி வழங்க வேண்டும் என, பருவாய் கிராமத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில், கலெக்டர் அறிவுறுத்தினார். பல்லடம் ஒன்றியம்,பருவாய் கிராமத்தில் நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் மனிஷ் நாரணவரே சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், நீர் தொட்டிகள், பயன்பாட்டில் இல்லாத பானைகள், குளிர்சாதன பெட்டியின் பின்புறம், பழைய டயர்கள், தேங்காய் மட்டைகள் உள்ளிட்டவற்றில் நீர் தேங்கி அவற்றில் கொசு புழுக்கள் வளர வாய்ப்பு உள்ளது. எனவே அவற்றை முறையாக அகற்றியும் நீர் தேங்காமல் சுத்தம் செய்து, நோய் தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்க தொட்டிகளையும் சுத்தப்படுத்தி குளோரினேஷன் சரியான அளவில் கலந்து இருப்பது குறித்து கண்காணிக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் பயன்பாடு இல்லாத திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கை பம்புகள் ஆகியவற்றை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற வேண்டும். புதிதாக கட்டப்படும் வீடுகள், வணிக வளாகங்கள், கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும்போது, கண்டிப்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்பே அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து, கலெக்டர் தலைமையில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றப்பட்டது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சங்கமித்திரை, மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி மற்றும் உதவி இயக்குனர் அசோகன், பி.டி.ஓ., கனகராஜ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை