மாணவர்களிடம் அத்துமீறல்: கல்லுாரி மாணவர் கைது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கயம், தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியின் பின், பாரதியார் நகரில் சமூக நீதி விடுதி செயல்பட்டு வருகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 50 மாணவர்கள் தங்கி, பள்ளியில் படித்து வருகின்றனர். விடுதி வார்டனாக மாரிமுத்து, 45 என்பவர் பணியாற்றி வருகிறார். தற்காலிக வார்டனாக காங்கயத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரவிந்த், 22 என்பவரை, கடந்த, இரு ஆண்டுகளாக விடுதியில் தங்க வைத்து, மாத சம்பளம் கொடுத்து வருகிறார். காங்கயம் அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று முன்தினம் குழந்தைகள் தின விழா நடந்தது. அதில், திருப்பூர் சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று விழிப்புணர்வு செய்தனர். அப்போது, விடுதியை சேர்ந்த மாணவர்கள் சிலர், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து, கல்லுாரி மாணவர் அரவிந்த் மீது புகார் கொடுத்தார். புகார் எதிரொலியாக, கலெக்டர் மனிஷ் நாரணவரே, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், குழந்தைகள் நல குழுவினர், சைல்டு லைன் அமைப்பினர் உள்ளிட்டோர் நேற்று காங்கயம் சென்று சம்பந்தப்பட்ட விடுதியில் ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், கல்லுாரி மாணவர் அரவிந்த், 22, என்பவர், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும், எட்டு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் அரவிந்த் மீது 'போக்சோ' வழக்கு பதிந்து கைது செய்தனர். எவ்வித அனுமதியின்றி, தற்காலிக வார்டனாக அரவிந்த் செயல்பட்டது தொடர்பாக விடுதி வார்டன் மாரிமுத்துவிடம் விசாரித்து வருகின்றனர்.