வரப்புகளில் வண்ண, வண்ண சேலை! காட்டுப்பன்றிகளால் கவலை
உடுமலை: மக்காச்சோள நடவு துவங்கியதும், காட்டுப்பன்றிகள் ஊடுருவல் அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த, வரப்புகளில் சேலை கட்டுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெகுதொலைவில் அமைந்துள்ள உடுமலை, குடிமங்கலம் வட்டார கிராமங்களில், காட்டுப்பன்றிகள் தொல்லை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டது. கடந்த சில சீசன்களாக, மக்காச்சோளம் சாகுபடியில் காட்டுப்பன்றிகள் அதிக சேதம் ஏற்படுத்தி வருகின்றன. பயிர்கள் கதிர் பிடிக்கும் தருணத்தில் இரவு நேரங்களில், கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள், கதிர்களையும், சோளப்பயிர்களையும் முற்றிலுமாக சேதப்படுத்துகிறது. ஏக்கருக்கு, 700 கிலோ மக்காச்சோளம் வரை அவற்றால் சேதமடைவதால், விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். வனத்துறை நடத்தும் குறை தீர் கூட்டத்தில், ஒவ்வொரு முறையும், இப்பிரச்னை குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பியும், வாக்குவாதம் நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தாலும், அதற்கான பணிகள் எதுவும் இப்பகுதியில் துவங்கவில்லை. தற்போது, உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு நடவு செய்த மக்காச்சோள பயிர்கள் கதிர் பிடிக்கும் தருணத்தில் உள்ளது. வடகிழக்கு பருவமழைக்காக மானாவாரியாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டுள்ளது. இத்தருணத்தில் மீண்டும் காட்டுப்பன்றிகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது. ராகல்பாவி சுற்றுப்பகுதிகளில், சாகுபடியை காப்பாற்ற பழைய சேலைகளை தலா, 50 ரூபாய்க்கு வாங்கி வரப்புகளில் கட்டி வருகின்றனர். சேலைகளை கட்டுவதால், காட்டுப்பன்றிகள் திசைமாறி சென்று விடும் என்ற அடிப்படையில், விவசாயிகள் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்; சிலர் துர்நாற்றம் வீசும் மருந்துகளை வரப்பில் தெளிப்பது என பல முயற்சிகளை செய்கின்றனர். விவசாயிகள் கூறுகையில், 'காட்டுப்பன்றிகளால் ஒவ்வொரு சீசனிலும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எங்களுக்கு தெரிந்த நடைமுறைகளை பின்பற்றி அவற்றை திசைமாற்ற முயற்சிக்கிறோம். வனத்துறை நிவாரணம் வழங்குவதை விட, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக துவக்க வேண்டும்,' என்றனர்.