அமராவதி கூட்டுறவு ஆலையில் எரிசாராய உற்பத்தி துவக்கம்; 7 லட்சம் லிட்டர் இலக்கு
உடுமலை : உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் வடிப்பாலை பிரிவில், நேற்று எரிசாராய உற்பத்தி துவக்க விழா நடந்தது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. ஆலையின் இணை நிறுவனமாக எரிசாராய வடிப்பாலை செயல்பட்டு வருகிறது.இந்த வடிப்பாலையில், எரிசாராயம் உற்பத்தி செய்வதற்காக, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்தின் உத்தரவுபடி, அரூர், தஞ்சாவூர், திருப்பத்துார் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் இருந்து, மொத்தம், 2,708 மெட்ரிக்., டன் கழிவுப்பாகு கொள்முதல் செய்யப்பட்டது.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 799 மெட்ரிக்., டன் கழிவுப்பாகு இருப்பு இருந்தது.இதையடுத்து, வடிப்பாலை பிரிவில், எரிசாராய உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு, நேற்று அதற்கான துவக்க விழா நடந்தது.நேற்று காலை ஆலையில் நடந்த விழாவில், திருப்பூர் கலெக்டர் கிருஸ்துராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி உள்ளிட்டோர் வடிப்பாலையில் உற்பத்தியை துவக்கி வைத்தனர்.சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் கூறியதாவது:அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பாலையில், 80 டிகிரி சூடுபடுத்தும் முறையில், 3,507 மெட்ரிக்., டன் கழிவுப்பாகில் இருந்து, ஒரு டன்னுக்கு, 225 லிட்டர் வீதம், 7 லட்சத்து 89 ஆயிரத்து 75 லிட்டர் எரிசாராயம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே போல், நுாறு டிகிரிக்கு மேல் சூடுபடுத்துதல் முறையில், 3,507 மெட்ரிக்., டன் கழிவுப்பாகில் இருந்து ஒரு டன்னுக்கு, 215 லிட்டர் வீதம், 7 லட்சத்து 54 ஆயிரத்து 5 லிட்டர் எத்தனாலும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உற்பத்திக்கு தேவையான பர்னஸ் ஆயில் வாங்க, சர்க்கரை ஆணையத்தில் இருந்து 30 லட்சம் ரூபாய் கடனாக பெறப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர். விழாவில், கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.