மேலும் செய்திகள்
'சொத்து வரி உயர்வு; மக்களுக்கு கடும் பாதிப்பு'
29-Nov-2024
திருப்பூர் : மாநகராட்சி சொத்து வரி உயர்வுக்கு எதிராக தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.கடந்த மாதம் நடந்த திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில், அ.தி.மு.க.,வினர் சொத்து வரி உயர்வைக் கண்டித்து, கருப்பு சட்டை அணிந்தும், தலையில் முக்காடிட்ட படியும் போராட்டம் நடத்தினர். மேயரை முற்றுகையிட்டும், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.த.மா.கா., மற்றும் தி.மு.க., கூட்டணிக் கட்சியான கம்யூ.,- காங்.,கவுன்சிலர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குப் போட்டியாக அ.தி.மு.க., வினரும் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்து, கைதாகினர். மறியலைக் கலைக்க முயன்ற போது, கம்யூ.,வினர் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.சொத்து வரி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தே.மு.தி.க., மற்றும் பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டன. மறியல் போராட்டத்துக்குப் பின்னரும், அ.தி.மு.க., நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பின்னரும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., -இந்திய கம்யூ., - மா.கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் ஆகிய கூட்டணிக் கட்சியினர் இரு கட்டமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.அக்கூட்டங்களின் முடிவுப்படி, இன்று(9ம் தேதி) சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி இக்கட்சியினர், மாநகராட்சி சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.திருப்பூர் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், கடந்த 4ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைப்பினர் முடிவின்படி அனைத்து கடைகளிலும் 10 நாட்களுக்கு கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிப்பது; போராட்டம் குறித்து துண்டுப் பிரசுரம் வினியோகிப்பது; வரும் 18ம் தேதி திருப்பூரில் முழு கடை அடைப்பு நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர, த.மா.கா., சார்பில் கடந்த 7ம் தேதி, உண்ணாவிரதம் நடத்த அறிவிக்கப்பட்டு, பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.சொத்து வரி உயர்வு குறித்த பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதற்கான தீர்வு என்ன என்பது குறித்து தெளிவான எந்த கருத்தும் இல்லை. தேர்தல் மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமே இவை நடத்தப்படுகிறது. இது திருப்பூருக்கு மட்டுமான பிரச்னை இல்லை; ஒட்டுமொத்தமான மாநிலத்துக்கு உள்ள பிரச்னை. இதில் அரசு தான் உரிய தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:சொத்து வரி உயர்வு என்பது தனிப்பட்ட திருப்பூர் மாநகராட்சிக்கு மட்டும் ஏற்படுத்தப்படவில்லை. இருப்பினும் தொழில் துறை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்துகள் அடிப்படையில், அரசுக்கு கருத்துரு தயார் செய்யும் பணி நடக்கிறது. மாநகராட்சியில் உள்ள வரி விதிப்பு, வசூலாகும் வரியினங்கள் ஆகியன குறித்த விவரங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், உயர்த்தப்பட்ட வரி காரணமாக உயரும் வருவாய் இனம்; அதை குறைக்கும் போது ஏற்படும் இழப்பு விவரம்; அந்த இழப்பை சரிக்கட்ட மேற்கொள்ள வேண்டிய மாற்று ஏற்பாடு ஆகியன குறித்தும் விரிவாக விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. அவற்றை, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையில், நிதி ஆதாரங்கள் தடையின்றி பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.இது குறித்த விவரங்கள் முதல்வர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். நிதித்துறை, நகராட்சி நிர்வாகத் துறை செயலர்கள் உள்ளிட்டோருடன் உரிய ஆலோசனை நடத்தப்படும். அதன்படி உரிய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கருப்புக்கொடி: ஜெயராமன் அழைப்புதிருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிக்கை:அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகள் எவ்வித வரியும் உயர்த்தவில்லை. தி.மு.க.. ஆட்சிக்கு வந்த பிறகு, கடுமையான வரிச்சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளது. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, திருப்பூர் மாநகராட்சியில் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. மாநகராட்சியை கண்டித்து, உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.கடுமையான வரி உயர்வால், குறு, சிறு வியாபாரிகள் கடை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, நேற்று முதல் கறுப்புக்கொடி ஏற்றி வைக்கும் போராட்டத்தை துவக்கியுள்ளனர். அனைத்து வியாபாரிகள் சங்க பேரவையின் போராட்டத்துக்கு, அ.தி.மு.க., முழு ஆதரவு அளிக்கும்.தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும். வரி உயர்வு பாதிப்புகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக, அ.தி.மு.க., வினர், அவரவர் வீடுகள், கடைகள், வணிக வளாகம், தொழிற்சாலைகளில், 16 முதல், 18 ம் தேதி வரை, கறுப்புக்கொடி ஏற்றி வைத்து போராட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். *
29-Nov-2024