கூட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட... இன்னுமா அலட்சியம்! உயிரிழப்புக்கு பிறகாவது நடவடிக்கை தேவை
உடுமலை: தளிஞ்சி உள்ளிட்ட மலைவாழ் கிராம மக்கள், கூட்டாற்றை கடந்து செல்ல உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்ற வாக்குறுதி, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது; உயிரிழப்பு ஏற்பட்ட பிறகாவது, அரசு இப்பிரச்னையில் கவனம் செலுத்த, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரகத்துக்குட்பட்டது தளிஞ்சி மலைவாழ் கிராமம். இரு மலைகளுக்கு இடையிலுள்ள சமவெளியில், 160க்கும் அதிகமான வீடுகள் அமைத்து, மக்கள் வசிக்கின்றனர்; பீன்ஸ் உட்பட சாகுபடி பணிகளிலும் ஈடுபடுகின்றனர். அக்குடியிருப்பு மக்கள் சமவெளிக்கு வர, 6 கி.மீ., அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள கரடுமுரடான பாறைகள் நிறைந்த வழித்தடம் வழியாக பயணிக்க வேண்டும். இந்த வழித்தடத்தில், பாம்பாறு, தேனாறு சந்திக்கும் கூட்டாறு பகுதி அமைந்துள்ளது. கேரள மாநிலம், மறையூர் சுற்றுப்பகுதிகளில் மழை பெய்யும் போது, கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது, ஆற்றை கடக்க முடியாமல், தளிஞ்சி உள்ளிட்ட மலைவாழ் கிராம மக்கள் தவிக்கின்றனர். மழைக்காலத்தில், கேரளா மாநிலம் சம்பக்காடு சென்று, அங்கிருந்து சின்னாறு ரோட்டுக்கு வந்து அங்கிருந்து பஸ் ஏறிச்செல்கின்றனர். சம்பக்காடு வழியாக செல்ல கேரள வனத்துறையால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அவசர மருத்துவ தேவைக்கு கூட, வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை நீண்ட காலமாக உள்ளது. அதே போல் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்த, சமவெளிக்கு வர அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது கூட்டாற்றை கடக்க, ஆற்றின் இருபுறங்களிலும் கயிறு கட்டி, அதை பிடித்தபடி, பரிசலில் ஏறி ஆற்றை கடக்கின்றனர். இவ்வாறு, ஆற்றை கடக்கும் போது, மாரியப்பன் என்பவர் கடந்த 19ம் தேதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். மழைக்காலங்களில், சமவெளிக்கு வர முடியாமல், பல மலைவாழ் கிராமங்கள் தனித்தீவாக மாறி விடுகிறது. இனியாவது தளிஞ்சி, தளிஞ்சிவயல் சுற்றுப்பகுதி மலைவாழ் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான கூட்டாற்றை கடக்கும் வகையில், பாலம் கட்டித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் காலத்தில் மட்டும் மலைவாழ் கிராமங்களை எட்டிப்பார்க்கும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குறுதி மட்டும்... கூட்டாற்றை கடந்து செல்ல பாலம் கட்டப்படும் என, ஒவ்வொரு சட்டசபை தேர்தலின் போதும், மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்குறுதி அளிப்பது வழக்கமாக உள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அப்போதைய அமைச்சர் ராதாகிருஷ்ணன், கூட்டாறு பகுதியில், பாலம் கட்டப்படும் என உறுதியளித்தார். அதன்பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன் (தி.மு.க.,) உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கூட்டாறு பகுதியில் உயர் மட்ட பாலம் கட்டப்படும் என தெரிவித்தனர்; பல முறை ஆய்வும் நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகள் வாக்குறுதி மட்டும் மாறாமல் உள்ள நிலையில், தவிக்கும் தளிஞ்சி மக்களுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.