உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆமை வேகத்தில் வாரச்சந்தை கட்டுமானம்

ஆமை வேகத்தில் வாரச்சந்தை கட்டுமானம்

காங்கயம்: காங்கயம் நகராட்சி வாரச்சந்தைக்கு, 9.62 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதி மேம்படுத்தும் பணிகள், ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. காங்கயம் வாரச்சந்தை மிகப்பெரிய சந்தை. வாரந்தோறும் திங்கட்கிழமையன்று கூடும் இந்த சந்தைக்கு திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்பர். காங்கயம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் விளைவித்த விளைபொருட்களையும் கொண்டு வந்து இந்த சந்தையில் விற்று தங்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். ஆனால், வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் சந்தையில் எந்த அடிப்படை வசதிகளும், பல ஆண்டுகளாக செய்து தரப்படாததால் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இங்கு அமைக்கப்படும், கடைகளுக்கு தரைத்தளமோ, மேற்கூரையோ அமைத்துதரப்படாததால், சாக்கு, தார்பாய் கொண்டு கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மழை காலங்களில் தங்கள் விற்பதற்கு எடுத்து வந்த பொருட்களையும் மழையில் நனையாமல் காப்பாற்றி ஒதுங்க கூட, இடமில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்காக, 2022ல், 9.62 கோடி ரூபாய் மதிப்பில், 380 கடைகளுடன், அடிப்படை வசதி மேம்படுத்தும் பணிக்கு அமைச்சர் சாமிநாதன் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார். இதில், 294 கடைகள் அமையும் வகையில் மேற்கூரையுடன் கட்டப்பட்டு வருகிறது. மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பாக வியாபாரம் செய்யவும், அதனை மக்கள் வாங்கி செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த, மூன்றரை ஆண்டுகளாக கட்டுமான பணிகள் இன்னும் முழுமை பெறாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. எனவே, பணிகளை விரைவுபடுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது ஒரு சிறிய இடத்தில் சந்தை கூடுகிறது. இதனால், வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் அலட்சியத்தால் புதிய சந்தை கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இப்பணிகளை விரைந்து முடித்து திறக்க நடவடிக்கை வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ