ஒப்புநோக்கு பட்டியல் ஒத்திவைப்பு ஒப்பந்ததாரர்கள் கடும் அதிருப்தி
பல்லடம்: பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாயிலாக, ஊரகப் பகுதிகளுக்கு மேற்கொள்ளப்படும், 19 அரசு ஒப்பந்த பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. ஒப்பந்ததாரர்கள், 'ஆன்லைன்' வாயிலாக ஒப்பந்த புள்ளிகளை பதிவேற்றம் செய்தனர்.நேற்று முன்தினம், நிர்வாக காரணங்களுக்காக ஒப்பு நோக்கு பட்டியல் வெளியிடுவது ஒத்திவைக்கப்படுவதாக, பி.டி.ஓ., மூலம் அறிவிப்பு வெளியானது.இதை ஏற்காத ஒப்பந்ததாரர்கள், உடனடியாக ஒப்புநோக்கு பட்டியல் வெளியிட வேண்டும் என்று கோரி, பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பி.டி.ஓ., கனகராஜ், ஒப்பந்ததாரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டு, ஒப்பு நோக்கு பட்டியல் வெளியிடப்படும் என, பி.டி.ஓ., கூறியதை தொடர்ந்து, ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், நேற்று ஒப்புநோக்கு பட்டியல் வெளியிடப்படவில்லை.ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், 'தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை என்பதாலும், நிர்வாக காரணங்களாலும், வரும் திங்கட்கிழமை பட்டியல் வெளியிடப்படும் என பி.டி.ஓ., கூறியுள்ளார். பட்டியல் வெளியிடாமல் தொடர்ந்து இவ்வாறு இழுத்தடிப்பது அதிருப்தி அளிக்கிறது'' என்றனர்.