உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை பிரச்னையால் கலங்கும் மாநகராட்சி; பெயரளவுக்கு சர்வ கட்சிகள் ஆலோசனை.. கேள்விக்குறியான தீர்வு!

குப்பை பிரச்னையால் கலங்கும் மாநகராட்சி; பெயரளவுக்கு சர்வ கட்சிகள் ஆலோசனை.. கேள்விக்குறியான தீர்வு!

இரண்டு வாரங்களுக்கு மேலாக, திருப்பூரில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கியிருக்கின்றன. தினமும் 800 டன் குப்பைகள்; மலைப்பாக இருக்கிறது. குப்பைகளைக் கொட்டுவதற்கு பாறைக்குழிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் தேட வேண்டியிருந்தது; ஆனால், அதற்கும் முற்றுப்புள்ளி விழுந்தது. எங்கு கொண்டு சென்றாலும், குப்பைகளைக் கொட்ட விடாமல், பொதுமக்கள் தடுத்து விடுகின்றனர். ''மாநகரை மட்டுமின்றி, எங்கள் ஊரையும் சேர்த்து கெடுக்க வந்துவிட்டீர்களா?'' என்று கோபம் கொண்டனர். ஆளும் கட்சி, கூட்டணிக்கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம் வேறுபாடே இல்லாமல், குப்பைப் பிரச்னை குறித்து பலரும் குமுறத் துவங்கினர். குற்றம்சாட்டும் ஒவ்வொருவருமே, குப்பைகள் தேக்கம் குறித்து பேசுகின்றனரே தவிர, இதற்கான அறிவியல்பூர்வ தீர்வு குறித்து பேசவில்லை. மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டு பகுதிகளிலுமே மக்கள் ஒத்துழைத்தால், இதற்கான தீர்வு சாத்தியம்தான். ஆனால், வார்டில் மக்கள் பிரதிநிதிகளில் துவங்கி பொதுமக்கள் பெரும்பாலானோர் 'குப்பை' என்று வந்ததுமே ஒதுங்கிக்கொள்கின்றனர்; அல்லது எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிடத் துவங்கிவிடுகின்றனர். கைபிசைந்து நிற்கும்மாநகராட்சி நிர்வாகம் இச்சூழலில்தான் கைபிசைந்து நிற்கிறது மாநகராட்சி நிர்வாகம். வழிதெரியாத சூழலில் சர்வகட்சிக் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்தக்கூட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமல் 'ரகசியம்' காக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), ஆனந்தன் (பல்லடம்), மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் அமித், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர் மற்றும் நிலைக்குழு தலைவர்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநகராட்சி சார்பில் அமைக்கப்படவுள்ள சி.என்.ஜி., உற்பத்தி மையம், முதல்வர் அறிவித்துள்ள குப்பையில் மின்சாரம் உற்பத்தி திட்டம், குப்பைகள் பிரித்து கையாளும் மையங்கள் அமைத்தல்; குப்பைகள் பிரித்து சேகரிக்கும் முயற்சி அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. குப்பைகளை அகற்றபாறைக்குழிதான் தீர்வாம் ''தொலைநோக்கு பார்வையில் அமையவுள்ள திட்டங்கள் பயன்பாட்டுக்கு வர சில மாதங்கள் ஆகும் என்ற நிலையில், பெருகி வரும் குப்பையை அகற்ற பாறைக்குழி தான் ஒரே வழி. இதுகுறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய பிரதிநிதிகள், குப்பையை கையாளும் மாற்று திட்டங்கள் விரைவில் துவங்குவதற்கு அரசை வலியுறுத்த வேண்டும். பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்படும் நிலையில், அனைத்து வகையிலும் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு தெளிவான வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அறிவியல் ரீதியான நடவடிக்கை அவசியம். கட்டாயம் இறைச்சி மற்றும் உணவுக்கழிவுகள் தனியாக கையாளப்படுவது உறுதிப்படுத்த வேண்டும். குப்பைகளில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்து தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்திடம்'தள்ளிய' மாநகராட்சி இரு பகுதியிலும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் உறுதியாக உள்ளோம். இதை மாநகராட்சி நிர்வாகம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், பாறைக்குழியை தேர்வு செய்வது, அப்பகுதியினரை ஏற்றுக்கொள்ள வைப்பது போன்ற நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் வாயிலாக மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மீண்டும் பாறைக்குழியை நோக்கி பயணிப்பதுதான் தீர்வெனில் அது எப்படி நிரந்தரத்தீர்வாக இருக்கும்? மாநகரில் சேகரமான குப்பைகளை காளம்பாளையம், நெருப்பெரிச்சல், இச்சிப்பட்டி, வேலம்பாளையம் மற்றும் மொரட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளுக்கு கொண்டு சென்ற போது பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் எதிர்த்தனர். எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் குப்பை கொட்டப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்த நிலையில் வேறு வழியின்றி பாறைக்குழிகளுக்கு குப்பை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக குப்பைகள் வெளியே கொண்டு செல்லப்படாமல் மாநகர் பகுதியில் பல இடங்களில் கொட்டிக் குவிக்கப்பட்டு வருகிறது. அசாதாரண சூழலில்தான், சர்வகட்சி ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Joe Rathinam
ஆக 20, 2025 09:24

தீண்டாமை காரணமாக சுகாதாரத்திற்கு மிக முக்கியமான துறையாக இருந்தாலும், நம் நாட்டில் சுகாதாரத் துறை மிகவும் அலட்சியப் படுத்தப்படுகிறது. இது ஒரு அறியாமை. நாட்டின் ஆட்சியாளர்கள் நாட்டின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


V RAMASWAMY
ஆக 19, 2025 10:34

விளம்பரத்திற்காக தமிழகத்தில் வெறும் வாய்பேச்சுக்கள் தான் அதிகம். நடைமுறைப் படுத்தக்கூடிய வழிமுறைகள் ஏராளமாக உள்ளான. வல்லுநர்களைக் கலந்து, தேவைப்பட்டால் சிங்கப்பூர் முறையைக் கையாண்டால் சுத்தம் சுகமாக எல்லா இடங்களையும் . மிளிரசசெய்யமுடியும்


புதிய வீடியோ