உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்.. 1,700 புகார்கள்!

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்.. 1,700 புகார்கள்!

திருப்பூர்: திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் பள்ளி, கல்லுாரி, பொதுமக்கள் கூடும் இடம், பனியன் நிறுவனம் என, அனைத்து இடங்களிலும் சைபர் மோசடி தொடர்பாக, விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ஆனால், சைபர் மோசடிப் புகார்கள் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜன., முதல் தற்போது வரை என, 20 மாதங்களில் நகரில், பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து, ஆயிரத்து, 700 புகார்கள் வந்துள்ளன. பத்து கோடி ரூபாயை மக்கள் ஏமாந்துள்ளனர். விரைந்து செயல்பட்ட காரணத்தால், 4 கோடியே 75 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டது. ஏமாற்றிய கும்பலிடம் இருந்து, ஒரு கோடி ரூபாயை மீட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநகர சைபர் கிரைம் போலீசார் வழங்கினர். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: சமூக வலைதளங்களில் நம் விபரங்களை, நமக்கு தெரிந்த நபர்களை தவிர மற்றவர்கள் பார்க்க முடியாத மாதிரி 'செட்டிங்' அமைத்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட மாதத்துக்கு ஒரு முறை, பாஸ்வேர்டை மாற்றம் செய்ய வேண்டும். எளிதாக யூகிக்கும் வகையில் பாஸ்வேர்டை வைக்கக் கூடாது. பங்குச்சந்தை முதலீடு போன்றவற்றில் எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுவதை நம்பக்கூடாது. சமூக வலைதளத்தில், நாம் அதிகம் பார்க்கும் வெப்சைட் சார்ந்த விளம்பரங்கள் வரும். அதன் மூலம் அவர்கள் கண்காணித்து நம்மை சிக்க வைத்து விடுகின்றனர். வங்கி சார்ந்த விபரங்களை யார் கேட்டாலும் கொடுக்கக் கூடாது. தற்போது நடக்கும் மோசடிகள் அனைத்தும், பணத்தை இழக்கும் நபர்களையே, மோசடி நபர்களாக போலீசில் சிக்க வைக்கும் அளவுக்கான பெரியளவில் நடக்கிறது. வங்கி சார்ந்த பரிவர்த்தனை போன்றவற்றை மேற்கொள்ள பிரத்யேகமான மொபைல் போன் மற்றும் எண்களை பயன்படுத்தலாம். அதை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. கடந்த, ஒன்றரை ஆண்டில், 20 முதல் 25 பேர் வரை கைது செய்யப்பட்டனர். மற்ற நபர்கள், வெளி மாநிலங்கள் உள்ளிட்ட இடங்களில் பதுங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனே, புகார் கொடுக்கும் போது, அந்த பணத்தை எடுக்க முடியாமல் முடக்க முடியும். தாமதிக்கும் போது, பத்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் பணம் பரிமாறப்பட்டு எடுக்கப்படுகிறது. சமீப காலமாக, இதுபோன்று கைவரிசை காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை