விபத்துக்கு வழிகாட்டும் ஆபத்தான குழிகள்... அதிகாரிகளுக்கு உறக்கம் தெளியுமா?
திருப்பூர்; சமீபத்தில் பெய்த மழையில், திருப்பூர் பிரதான ரோடுகளில் மழைநீர் தேங்கி நின்ற இடங்கள் அனைத்தும் குழியாக மாறி, வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்கி வருகிறது.கடந்த மாதம், திருப்பூரில் பெய்த மழையில் பிரதான ரோடுகள், வீதி ரோடுகளின் பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மழை ஓய்ந்து, நீர் வற்றிய நிலையில் மழைநீர் தேங்கிய இடங்கள் அனைத்தும், தற்போது குழியாக காட்சி தருகின்றன.குறிப்பாக, பிச்சாம்பாளையம், பி.என். ரோடு, காட்டன் மில் பிரிவு பெட்ரோல் பங்க் எதிரில், மங்கலம் சாலை - பாரபாளையம் பிரிவில் இருந்து முருகம்பாளையம் செல்லும் சாலை, அவிநாசி - திருப்பூர் சாலையில் பூண்டி, தண்ணீர் பந்தல், எஸ்.ஏ.பி., பங்களா ஸ்டாப், மில்லர் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சாலைகளிலும் இத்தகைய குழிகளை காண முடியும்.இந்த சாலைகளில் எந்நேரமும் அடர்த்தியான வாகன போக்குவரத்து இருக்கும்; சாரை சாரையாக செல்லும் வாகன ஓட்டிகள், குறிப்பாக, டூவீலர் ஓட்டிகள், குழிகளில் சிக்காமல் இருக்க, வாகனங்களை அதன் ஓரமாக செலுத்தினாலோ, அல்லது வேகத்தை குறைத்தாலோ, பின்வரும் வாகனங்கள் மோதுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது; இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழவும் வாய்ப்புண்டு.பஸ் உட்பட கனரக வாகனங்களை பின்தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, சாலையில் குழி இருப்பது தெரிவதில்லை. 'சட்'டென கண்ணுக்கு தெரியும் குழியில் சிக்காமல் வாகனங்களை விலக முயற்சிக்கும் போது, பின்வரும் வாகனங்கள் மோதுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ரோட்டிலேயே 'எட்டு' போடலாம்?
வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:'சாலை விதியை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும்' என, போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். டூவீலரில் ெஹல்மெட் அணியாமல் செல்வோர், 'சீட்' பெல்ட் போடாமல் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவோர், அதிவேகத்தில் பயணிப்போர், சிக்னலை மதிக்காதது, ஒருவழிப்பாதையில் வாகனங்களை செலுத்துவது என, போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடும் போலீசார், ரோட்டில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள குழியால் ஏற்படும் விபத்துக்கு யார் பொறுப்பு என்பதையும் விளக்க வேண்டும்.டூவீலர் ஓட்டிகள் பிரதான சாலைகளிலேயே, '8' போட்டு வாகனங்களை ஓட்டும் நிலை தான் பல இடங்களில் இருக்கிறது. கலெக்டர் தலைமையில் நடக்கும் சாலை பாதுகாப்பு கூட்டத்தில் இத்தகைய பிரச்னைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதிகாரிகள் 'உறக்க' நிலையில் இருப்பது, விபத்துக்கு தான் வழி வகுக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். சாலை பாதுகாப்புக்குழுகூட்டம் எதற்கு?
கலெக்டர் தலைமையில், போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கெடுக்கும், சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடத்தப்படுவதுண்டு. சாலையில் விபத்து நேரிடுவதற்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, அதற்கு தீர்வு காணும் நோக்கில் தான் இத்தகைய கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் கூட்டாக இணைந்து, சாலை விபத்து ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து, அறிக்கை தயாரித்து, அதற்கு மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும்.ஆனால், தினம், தினம் வாகன ஓட்டிகளை திணற வைக்கும் இந்த மரணக்குழிகள், அதிகாரிகள் பார்வையில் படாமல் இருப்பது, ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். ஒரு வேளை இந்த பிரச்னைகள் குறித்து விவாதித்திருந்தால், எடுக்கப்பட்ட முடிவு குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதும் அதிகாரிகள் கடமை. ஒருங்கிணைப்பு சுத்தமாக இல்லை
நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் சார்பில் ரோடு புதுப்பிக்கப்பட்ட பின், சில நாள் இடைவெளியில், சாலையோரம் குழாய் பதிக்கவோ, அல்லது புதுப்பிப்பு பணி மேற்கொள்ளவோ குடிநீர் வடிகால் வாரியத்தினர் சார்பில் குழி தோண்டப்படுகிறது. அதே போன்று, சில தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தினர் சார்பில் கேபிள் பதிக்க குழி தோண்டப்படுகிறது. தோண்டப்படும் குழிகள் மீண்டும் சரிவர மூடப்படுவதில்லை; பழைய நிலைக்கு புதுப்பிக்கப்படுவதுமில்லை. நாளடைவில் அந்த இடத்தில் நிரந்தரமாகவே குழி ஏற்பட்டு விடுகிறது. துறைகள் ஒருங்கிணைந்து சாலை புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததே இதற்கு காரணம்.