உடுமலை: உடுமலை அருகே வேகமாக வளர்ந்து வரும், தேவனுார்புதுார், பெதப்பம்பட்டி மற்றும் குமரலிங்கம் பகுதியில், பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், பல முறை கருத்துரு அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால், அப்பகுதிகளின் வளர்ச்சியில் தடை ஏற்பட்டுள்ளது.உடுமலை பகுதியில், தற்போது உடுமலை நகரம் மற்றும் மடத்துக்குளத்தில் பஸ் ஸ்டாண்ட்கள் அமைந்துள்ளது. கணியூரில் பெயரளவுக்கு பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது.நீண்ட காலமாக இந்த மூன்று பஸ் ஸ்டாண்ட்களை தவிர்த்து, புதிதாக ஒரு பஸ் ஸ்டாண்ட் கூட எப்பகுதியிலும் அமைக்கப்படவில்லை. குறிப்பாக, மக்கள் தொகை மற்றும் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ள பகுதிகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தேவனுார்புதுார்
உதாரணமாக, உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட தேவனுார்புதுாரானது, திருப்பூர்-கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து, 25க்கும் அதிகமான பஸ்கள் அக்கிராமம் வழியாக இயக்கப்படுகிறது.திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் அவ்வழியாகவே செல்கின்றன.சுற்றுப்பகுதியிலுள்ள, 25க்கும் அதிகமான கிராமங்களுக்கு மையமாகவும், அதிக போக்குவரத்து உள்ள பகுதியாகவும் உள்ளதால், தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.கடந்த பத்தாண்டுகளில் பல முறை அந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், அவ்வழியாக வரும் பஸ்கள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் நிரந்தரமாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. பெதப்பம்பட்டி
இதே போல், பொள்ளாச்சி-தாராபுரம் ரோட்டில், பெதப்பம்பட்டி நால்ரோடு சந்திப்பு அமைந்துள்ளது. குடிமங்கலம் ஒன்றியத்தின் மையப்பகுதியிலுள்ள இப்பகுதி வழியாக, தாராபுரம், கரூர் உள்ளிட்ட வழித்தடங்களிலும், பொள்ளாச்சி, உடுமலையில் இருந்தும் அதிக பஸ்கள் இயக்கப்படுகின்றன.அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைத்தால், நெரிசல் குறைவதுடன் வளர்ச்சியும் அதிகரிக்கும் என குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து, கருத்துரு சமர்ப்பிக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. பல முறை கருத்துரு சமர்ப்பித்தும் நடவடிக்கை இல்லை. குமரலிங்கம்
மேலும், மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்ட குமரலிங்கம், மக்கள் தொகை அதிகமுள்ள பகுதியாகும். பழமையான கோவில்கள் நிரம்பிய இப்பகுதிக்கு, பழநி, உடுமலையில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.பேரூராட்சியாக உள்ள அப்பகுதியில், பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும் நீண்ட காலமாக வலியுறுத்துகின்றனர். மடத்துக்குளம் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்ட போது, குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் என்ற மக்கள் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் நீண்ட காலமாக பல வளர்ச்சி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு, பஸ் ஸ்டாண்ட் அமைக்காததும் உதாரணமாகியுள்ளது.