| ADDED : ஜன 26, 2024 01:28 AM
திருப்பூர்;திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகம் 'குடிமகன்'களின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.திருப்பூர், காமராஜ் ரோட்டில், பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டி பயன்பாட்டில் உள்ள மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகம் உரிய பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாத காரணத்தால் சீரழிந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும், டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் சகட்டு மேனிக்கு செயல்படுகிறது.மது அருந்தி விட்டு வரும் குடிமகன்கள் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் இஷ்டம் போல் படுத்து உருளுகின்றனர்.மது போதையில் மயங்கி விழுவது; ஆடைகள் விலகி நடைபாதையில் படுத்துக் கிடப்பது; சுற்றுப்புறத்தை அசுத்தப் படுத்துவது; தகராறில் ஈடு படுவது என அன்றாடம் இது போன்ற காட்சிகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது.பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள எஸ்கலேட்டர் அமைப்பு, பயணிகள் பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. இதனால், மது பாட்டிலுடன் வரும் குடிமகன்கள் இந்த எஸ்கலேட்டர் படிகளில் அமர்ந்து மது அருந்துகின்றனர். அதே போல், வளாகத்தில் உள்ள கழிப்பிடங்களிலும் மது அருந்தும் நபர்கள் அதிகம் உள்ளனர்.மது அருந்தி விட்டு காலி மது பாட்டில், டம்ளர், தின்பண்ட கவர்கள் என அங்கு வீசிச் செல்கின்றனர். எஸ்கலேட்டரில் வீசப்படும் இது போன்ற கழிவுகள் எஸ்கலேட்டரை பயன்படுத்த முடியாமல் செய்கிறது. அதே போல் கழிப்பறைகளில் வீசப்படும் இது போன்ற பொருட்கள் கழிப்பிடங்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் ஆக இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை. சுத்தமாகவாவது பராமரிக்கப்பட வேண்டும்.