பராமரிப்பு இல்லாத தீர்த்த கிணறுகள்; பூண்டி கோவிலில் பக்தர்கள் வேதனை
திருப்பூர் : பிரசித்தி பெற்ற திருமுருகன்பூண்டி கோவிலில், தீர்த்தக் கிணறுகள் உரிய பராமரிப்பில்லாமல் பயன்படுத்த முடியாமல் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும், குப்பை நிறைந்து கோவில் வளாகம் அசுத்தமாக காட்சியளிக்கிறது.திருமுருகன்பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. கொங்கு ஏழு சிவாலயங்களில் ஒன்றாக அமைந்துள்ள இக்கோவில் சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடப் பெற்ற பெருமை கொண்டது. இக்கோவிலில், பல பகுதி களில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டோர் வந்து பரிகார பூஜைகள் செய்து குணமடைந்து வருகின்றனர்.கோவிலின் சிறப்பாக ஏழு தீர்த்த கிணறுகள் உள்னன. இவற்றில் நீராடி, வழிபாடு செய்வது பக்தர்கள் வழக்கம். அண்மைக்காலமாக கோவிலுக்கு வந்து பக்தர்கள் குணமடைவதைக் காட்டிலும் தற்போதைய கோவில் நிலை கண்டு மனம் வெதும்பும் நிலை தான் காணப்படுகிறது.கோவிலில் புனித தீர்த்தமாக கருதப்படும் ஏழு தீர்த்தக் கிணறுகளில், தற்போது இரண்டு மட்டுமே பயன்படுத்தும் வகையில் உள்ளது. மீதமுள்ள ஐந்து கிணறுகளும் உரிய பராமரிப்பின்றி பாழடைந்து விட்டது.இவற்றில் சில கிணறுகளை கேட் போட்டு பூட்டியும் வைத்துள்ளனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புனித தீர்த்தத்தில் நீராட முடியாமலும், தீர்த்தம் எடுத்துப் பயன்படுத்தக் கூட முடியாமலும் மனம் வெதும்பியுள்ளனர்.கோவிலுக்கு புனித நீராட வரும் பக்தர்கள் பயன்படுத்தி வீசும் உடைகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. அவை ஆங்காங்கே குவியல் குவியலாக காணப்படுகிறது.இவற்றை முறையாக அகற்றுவதற்குப் பதிலாக அதே இடத்தில் தீ வைத்து எரித்து விடுகின்றனர் என்றும் பக்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதுதவிர, பல இடங்களில் குப்பைகள் சேர்ந்தும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மன நிம்மதியையும், தங்கள் பிரச்னைக்கு தீர்வுகளையும் தேடி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் இது போன்ற சோதனைகளை ஏற்படுத்துவது வேதனையாக உள்ளது என்று பக்தர்கள் ஆதங்கப்படுகின்றனர்.