நிழற்கூரை இல்லாமல் சிரமம்; நால்ரோட்டில் வேதனை
உடுமலை : கொங்கல்நகரத்தில், நிழற்கூரை இடித்து அகற்றப்பட்டுள்ளதால், பயணியர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை - ராமச்சந்திராபுரம் ரோடு சந்திக்கும் நால்ரோடு சந்திப்பு கொங்கல்நகரத்தில் உள்ளது. சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த, பயணியர், பொள்ளாச்சி மற்றும் தாராபுரத்துக்கு செல்ல பஸ்சுக்காக நால்ரோட்டில் காத்திருக்கின்றனர்.அப்பகுதியில், போதிய பராமரிப்பின்றி இருந்த நிழற்கூரை சில மாதங்களுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. அதன்பின்னர், புதிய நிழற்கூரை அமைக்கப்படவில்லை.இதனால், பயணியர் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தினர், கொங்கல்நகரம் நால்ரோட்டில் மீண்டும் நிழற்கூரை கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.