உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்டத்தில் ரேஷன் கடைகள் டிஜிட்டல்மயம் பொருட்கள் எடை துல்லியம்

மாவட்டத்தில் ரேஷன் கடைகள் டிஜிட்டல்மயம் பொருட்கள் எடை துல்லியம்

திருப்பூர் : ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க, புளுடூத் இணைப்புடன் தராசு வழங்கி, கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனால், பொருட்கள் சரியான எடையில் கிடைக்கின்றன.பொது வினியோக துறையில், கூட்டுறவு சங்கங்கள், விற்பனை சங்கங்கள், விற்பனை பண்டகசாலைகள், சுய உதவிக்குழுக்கள் சார்பில் ரேஷன் கடைகள் செயல்படுத்தப்படுகிறது. இந்த கடைகளில் பொருட்கள் வழங்க எடை போடும் தராசு தற்போது நவீனமாக டிஜிட்டல் தராசு வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் புளூடூத் இணைப்பு ஏற்படுத்தி, பாயின்ட் ஆப் சேல் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கருவியில் கடையில் இருப்பில் உள்ள பொருட்களின் விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ன. கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்க, கைரேகை அல்லது கருவிழி ரேகை பதிவு செய்யப்பட்ட பில் போட்டு, எடை சரிபார்த்து வினியோகிக்கப்படும். வழங்கப்படும் பொருளின் எடை, பி.எஸ்.ஓ., கருவியில் இருப்பில் குறையும். அவ்வகையில், பொருட்கள் இருப்பு சரி பார்ப்பு மிகவும் எளிதாகி விடுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 1135 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் அனைத்து கடைகளுக்கும் தற்போது இந்த தராசு வழங்கப்பட்டு முற்றிலும் டிஜிட்டல் மயமாகி விட்டது. பொருட்களைப் பொறுத்தவரை எடை சரியான அளவில் கிடைக்கிறது என்பது கார்டுதாரர்கள் தரப்பு கருத்து.ஊழியர்களுடன் வாக்குவாதம்தராசுகள் பெரும்பாலும், 10 கிலோ எடை திறன் கொண்டவை. பில் பதியப்பட்ட பொருள் எடை போட்டு வழங்கிய பின்னரே, அடுத்த பொருள் எடை போட முடியும். இதில் பெரும்பாலும் அரிசி, 10 கிலோவுக்கு மேல் வழங்க வேண்டிய நிலையில் இரு முறை, பில் போட்டு, பொருள் எடை போட்டு வழங்க வேண்டும். மேலும், அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு ஆகிய அனைத்து பொருட்களும் ஒவ்வொன்றாக பில் போட்டு, எடையிட்டு அதன் பின்னரே வழங்க வேண்டிய நிலை உள்ளது.ஒரு சில கடைகளில் விற்பனையாளர் மட்டுமே உள்ளனர். எடையாளர் இல்லை. இதனால், கூடுதலாக நேரம் செலவாகிறது. இதுபோல், காலதாமதம் ஏற்படுவதால், கடைகளில் ஊழியர்களுடன் கார்டுதாரர்கள் வாக்குவாதம் செய்வது வாடிக்கையாக உள்ளது. காலதாமதத்துக்கு தேவை தீர்வுதிருப்பூர் மாவட்டத்தில், மாதம் துவங்கி இரு வாரத்துக்குள் ஏறத்தாழ, 60 சதவீதம் பேர் வரை பொருள் வாங்கிச் சென்று விடுவது வழக்கம். தற்போது, மாற்றம் காரணமாக 20 முதல் 30 சதவீதம் பேர் வரை தான் பொருள் வாங்கியுள்ளதாக ரேஷன் ஊழியர்கள் கூறுகின்றனர். அதிக கூட்டம் உள்ள நாட்களில் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பிச் செல்லும் நிலையும் உள்ளது. காலதாமதத்தைத் தவிர்ப்பதற்கு உரிய தீர்வை காண வேண்டியது அவசியம்.

காலியிடங்கள் நிரப்பப்படுமா?

எடையாளர் இல்லாத கடைகளில் மேலும் நேரம் அதிகமாகிறது. பகுதி நேர கடைகள், கூடுதல் பொறுப்பு கடைகள் என்றால் பணிப் பளு மேலும் கூடுதலாகிறது. கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப நேர்காணல் நடத்தி 3 மாதங்களாகியும் இன்னும் பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. பொருட்கள் வினியோகம் மட்டுமே எடை போட்டு சரி பார்த்து இருப்பில் கழிக்கப்படுகிறது. அதே சமயம் கடைகளுக்கு கொண்டு வரும் பொருட்கள் எடை சரி பார்த்து இருப்பில் சேர்க்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாமலே உள்ளது. மூட்டையாக வரும் பொருட்கள் பெரும்பாலும் எடை குறைவாகவே உள்ளன. இதில் ஏற்படும் வித்தியாசம் கடை ஊழியர்கள் அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது. - ரேஷன் ஊழியர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி