தினமலர்-பட்டம் இதழ் சார்பில் வினாடி-வினா ஆர்.வி.ஜி., மெட்ரிக் மாணவர்கள் அசத்தல்
உடுமலை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டி குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, உடுமலை குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 60 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'பி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி சஹானா, ஏழாம் வகுப்பு மாணவி ேஹமந்தரா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி, ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணபிரியா, ஆசிரியர் விந்தியா ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். சிறப்பம்சங்கள் மிக்கது! பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி கூறுகையில், ''பட்டம் இதழில் வரும் சர்வதேச செய்திகள் மாணவர்களுக்கு எளிமையாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. 'ஈடில்லா இயற்பியல்' மற்றும் வேதியியல் என்ற தலைப்பில் வரும் செய்திகள் மாணவர்களுக்கு மிகுந்த பயனை தருகிறது. 'சரித்திர சங்கமம்' என்ற பக்கம் மாணவர்களுக்கு நம் முன்னோர்களின் சிறப்புகளையும், வரலாற்றையும் அறிய உதவுகிறது. திறன் மேம்பாடு என்ற தலைப்பில் கொடுக்கப்படும் செய்திகள், வருங்கால செயற்கை நுண்ணறிவின் மேம்பாட்டை அறிய பயனுள்ளதாக அமைகிறது. தமிழ் சாரல் பக்கத்தில் வரும் செய்திகள் வாயிலாக பல தமிழ் சான்றோர்களின் சிறப்பையும் தமிழ் மொழியின் ஆழத்தையும் அறிந்து கொள்கின்றனர். கதைக்களத்தில் வரும் சிறுகதைகள் மாணவர்களை ஆர்வத்துடன் கவனிக்க வைக்கிறது. மேலும், கணித சமன்பாடுகள், புதிர்கள், வினாடி-வினா, படம் பார்த்து கண்டுபிடி போன்றவை மாணவர்களின் ஆர்வத்தையும் அறிவுத்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது,'' என்றார்.
பெற்றோரும் வாசிக்கின்றனர்
மாணவி சஹானா: 'பட்டம்' இதழ் வாசிக்கும் போது, பொது அறிவு அதிகரிக்கிறது. செய்தி தொகுப்புகள் படிக்க மிகவும் எளிமையாகவும், ஆர்வமாகவும் உள்ளது. 'பட்டம்' இதழ் வாசிப்பதால், எனக்கு தமிழ்மொழியின் மீது பற்று அதிகரிக்கிறது. வெளியாகும் தகவல்களை என் நண்பர்கள் மற்றும் பெற்றோருடன் பகிர்ந்து கொள்வதால், அவர்களும் பட்டம் இதழ் வாசிக்கிறார்கள். அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. மாணவி ேஹமந்தரா: 'பட்டம்' இதழில் வெளியாகும் தகவல்கள், சிந்தனை ஆற்றலை மேம்படுத்துவதாக உள்ளது. பல்வேறு துறைகள் சார்ந்த விபரங்கள் எளிதாக தெளிவாக புரியும் வகையில், 'பட்டம்' இதழில் வெளியாகிறது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப சிந்தனையும் அதிகரிக்க உதவுகிறது. எதிர்காலத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராக அடித்தளமாக இந்த இதழ் அமைந்துள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது.