பசி, சோர்வு, மயக்கத்துடன் தவித்த மாற்றுத்திறனாளிகள்
திருப்பூர், : மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் அலட்சியத்தால், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவ பரிசோதனை முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுவது தொடர்கதையாகிறது.திருப்பூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. கலெக் டர் அலுவலக கூட்ட அரங்கில், மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், உடல் பாதிப்பு சதவீதம் குறிப்பிடப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் கையொப்பமிட்ட அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மணிக்கணக்கில்காத்திருப்பு
கடந்த 13ம் தேதி நடைபெற்ற முகாமில், மாற்றுத்திறனாளிகள் 40 பேர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரோ, அன்று சென்னைக்கு சென்றுவிட்டார். அடையாள அட்டை கிடைக்கும் என, மணிக்கணக்கில் காத்திருந்தனர்.அலுவலர் சென்னை சென்ற விஷயம், தாமதமாகவே தெரிவிக்கப்பட்டதால், மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்; மீண்டும் 18ம் தேதி வந்து, அட்டைகளை பெற்றுச்சென்றனர். முன்னறிவிப்பு இல்லை
நேற்று நடந்த மருத்துவ பரிசோதனை முகாமிலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் பங்கேற்கவில்லை. எம்.எல்.ஏ., மகேந்திரன் தலைமையில் உடுமலையில் நடந்த இலவச ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இப்போதும், அலுவலர் இல்லாதது குறித்து, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை.காலையில் மருத்துவ பரிசோதனை முடிந்த மாற்றுத்திறனாளிகளும், உடன் வந்த பாதுகாவலர்கள் 70க்கும் மேற்பட்டோர், அலுவலரின் கையெழுத்திட்ட அடையாள அட்டையை கையோடு கொடுத்துவிடுவர் என, மதியம் வரை காத்திருந்தனர். சமூக ஆர்வலர் சரவணன் உள்ளிட்டோர், பணியிலிருந்த அலுவலர்களிடம் பேசியபின்னர்தான், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உடுமலை சென்றது தெரியவந்தது.அதன்பின், மாற்றுத்திறனாளிகளை வேறு நாளில் வந்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுமாறு கூறி, அனுப்பிவைத்தனர். பசி, சோர்வு, மயக்கத்தால் தவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, உணவு, தண்ணீர் வாங்கிக்கொடுத்தனர்.முகாமில் பங்கேற்காமல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவதாகவும், முன்னறிவிப்பு செய்யாததால், மாற்றுத்திறனாளிகள் இன்னல்களை சந்திப்பது குறித்தும், சமூக ஆர்வலர்கள், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் உடனடியாக மனு அளித்தனர்.வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கட்டாயம் பங்கேற்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, அலுவலர் வெளியூர் செல்ல நேரிட்டால், ஒருநாள் முன்னரே அறிவிக்கவேண்டும் என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.