தீபாவளி காற்று மாசு: ஆய்வு துவக்கம்
திருப்பூர் : திருப்பூரில் தீபாவளி காற்று மாசு அளவீடு துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில், இரண்டு இடங்களில் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு வெடிக்கப்படும் பட்டாசு ரகங்களால், காற்று மாசு இயல்பைவிட அதிகரித்துவிடுகிறது. மாசுக்கட்டுப்பாடு வாரியம், திருப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை கால காற்று மாசு குறித்து ஆய்வு செய்துவருகிறது.மாசுக்கட்டுப்பாடு வாரிய விஞ்ஞானிகள் குழுவினர், கடந்த 24ம் தேதி முதல் காற்று மாசு அளவீடு பணிகளை துவக்கியுள்ளனர்.இதற்காக, மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட வடக்கு பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ள குமரன் வணிக வளாகம் மற்றும் ராயபுரத்தில் பறக்கும்படை அலுவலகத்தில் என இரண்டு இடங்களில் 'ஆம்பியன் ஏர் குவாலிட்டி மெஷர்மென்ட்' கருவி வைக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி வரை, பண்டிகைக்கு முந்தைய காற்று மாசு அளவிடப்படுகிறது; 31ம் தேதி முதல் நவ., 7ம் தேதி வரை, பண்டிகை கால காற்று மாசு கணக்கிடப்பட உள்ளது.'ஆம்பியன் ஏர்குவாலிட்டி மெஷர்மென்ட்' கருவியினுள், பில்டர் காகிதம் வைக்கப்பட்டுள்ளது. இதில், காற்றில் கலந்துள்ள 2.5 மைக்ரானுக்கு கீழ் உள்ள நுண் துகள்கள்; 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள நுண் துகள்கள் மற்றும் சர்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு அளவுகள் பதிவு செய்யப்படும்.எட்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பில்டர் காகிதம் மாற்றப்பட்டு, அளவீடுகள் கணக்கிடப்படும்.பண்டிகை நாளான 31ம் தேதி ஒலி மாசு அளவிடப்படும். பண்டிகைக்கு முன் ஏழு நாட்கள்; பண்டிகைக்குப்பின் ஏழு நாட்கள் என்கிற அடிப்படையில், 14 நாட்கள் காற்று மாசு அளவிடப்படும். இந்த அளவீடுகள், கடந்தாண்டுடன் ஒப்பீடு செய்யப்பட்டு, மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைமைக்கு அனுப்பிவைக்கப்படும்.- விஞ்ஞானிகள், மாசுக்கட்டுப்பாட்டுவாரிய ஆய்வகம்.