உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விலங்குகள் கடித்தால் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்!

விலங்குகள் கடித்தால் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்!

'நாய்க்கடிக்கு சிகிச்சை பெறுவது போல், மற்ற விலங்குகள் கடித்தாலும், உரிய சிகிச்சை பெற வேண்டும்' என, அறிவுறுத்தியிருக்கிறது, சுகாதாரத்துறை.'தமிழகத்தில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும், வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் 'ரேபிஸ்' என்ற நோய் தாக்கி, 18 பேர் பலியாகியிருப்பது தான் இந்த, அறிவுறுத்தலுக்கு முக்கிய காரணம்.'நாய்கள் மட்டுமின்றி, பிற விலங்கினங்கள் கடித்தாலும் உதாசீனமாக இருந் துவிடக்கூடாது' என்ற அபாய எச்சரிக்கையையும் எழுப்பியிருக்கிறது சுகாதாரத்துறை. இது, தமிழக அளவிலான பிரச்னை மட்டுமல்ல; ரேபிஸ் நோயால், உலகளவில் ஏற்படும் உயிரிழப்பில், 36 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது.இதுகுறித்த விழிப்பு ணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில்தான், ஆண்டுதோறும், ஜூலை 6ம் தேதி, உலக விலங்கு வழி நோய்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.இது குறித்து, கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:தெருநாய்கள் மற்றும் வளர்ப்புப் பிராணிகள் கடித்து மனிதர்கள் காயமடையும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 'ரேபிஸ்' தொற்றில் இருந்து, செல்லப்பிராணிகள், மனிதர்களை பாதுகாக்க ஒரே வழி, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதுதான்.ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, வவ்வால் என எந்தவொரு விலங்கினம் கடித்தாலும் பாதிப்பு ஏற்படும். எனவே, எவ்வகை விலங்கு கடித்தாலும், சிகிச்சை பெறுவது அவசியம். அப்போது தான், உயிரிழப்பை தடுக்க முடியும். இதற்கான சிகிச்சை முறை, மருந்து, மாத்திரை, தடுப்பூசி ஆகியவை அரசு மருத்துவமனைகளில், தயார் நிலையில் உள்ளன.விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு பரவும் நோய்கள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் மட்டுமில்லாது கொசுக்களின் மூலமாகவும் பரவுகிறது. சிறிய கொசு, தான் டெங்கு என்ற உயிர்க்கொல்லி நோயை வரவழைக்கிறது.தற்போதைய சூழலில் வெறிநாய் வைரஸ், பிளேக், இபோலா வைரஸ், இன்புளூயன்சா, லெப்டோ பைரோசிஸ், பறவைக் காய்ச்சல், ஆந்த்ராக்ஸ், மாடுகள் மூலம் பரவும் காசநோய், புருசெல்லோசிஸ், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற விலங்கு வழி நோய்கள், மனிதர்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உணவு, நீர் மற்றும் சுற்றுப்புறங்களின் வாயிலாக பரவுகிறது. அதே போன்று, சொறி, சிரங்கு உள்ளிட்ட தோல் வியாதிகளும் பரவுகின்றன.எனவே, வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மட்டுமின்றி, எந்தவொரு பறவை, விலங்கினம் கடித்தாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதும், சிகிச்சை பெற்றுக் கொள்வதும் அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.- நாளை (ஜூலை6ம் தேதி) உலக விலங்கு வழி நோய்கள் தினம்

வரலாற்று முக்கியத்துவம்

கடந்த, 1885ல், லுாயிஸ் பாஸ்டியர் என்ற பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த உயிரியியல் வல்லுனர், வெறிநாய்க்கடிக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் இறங்கி, வெற்றியும் கண்டார். ஜோசப் மெய்ஸ்டர் என்ற சிறுவனுக்கு முதலில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி, ரேபிஸ் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் நினைவாகத்தான், ஆண்டுதோறும், ஜூலை 6ம் தேதி, விலங்கு வழி நோய்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னுாரில் வெறிநாய்கடிக்கு மருந்து தயாரிக்கும், பாஸ்டியர் நிறுவனம், கடந்த, 1907 முதல் செயல்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை