போராட்டக் களத்துக்கு தள்ள வேண்டாம்
பல்லடம்; இடுவாய் கிராமத்தில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்துக் கட்சியினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர் பிரமுகர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். உ.உ.க., மாநிலத் தலைவர் செல்லமுத்து மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - கம்யூ., - ம.தி.மு.க., கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் பேசியதாவது: விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் நிறைந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுமானால், எதிர்காலத்தில் இப்பகுதி என்னவாகும் என்றே தெரியாது. நிலத்தடி நீரை நம்பி இப்பகுதி உள்ளது. துாய்மையான இப்பகுதியை குப்பை மேடாக மாற்ற மாநகராட்சி நினைக்கிறது. இதை ஒருபோதும் விவசாயிகள் மற்றும் இடுவாய் பகுதி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கிராமத்தை துாய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். நியாயமான கோரிக்கைக்காக போராடும் கிராம மக்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட வேண்டும். அதை விடுத்து, அத்துமீறி குப்பை கொட்ட நினைக்கும் மாநகராட்சிக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம். வளர்ச்சிப் பணிகள் என்றால் நாங்களே வரவேற்போம். குப்பை கொட்டி ஊரை அழிக்க நினைத்தால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எனவே, எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இங்கு குப்பை கொட்டும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி குப்பை கொட்ட முயற்சித்து எங்களை போராட்ட களத்துக்கு தள்ளிவிட வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.