கிராமங்களில் உலர்களங்கள் தேவை; ரோடுகளில் காய வைக்கும் அவலம்
உடுமலை; உடுமலையில், மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், ரோடுகள் உலர் களங்களாக மாறியுள்ளன. கிராமங்கள் தோறும் விளை பொருட்களை காய வைக்கும் உலர் களங்கள் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, பொள்ளாச்சியில் விவசாயம் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது.தற்போது, இப்பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், ஒரு சில விவசாயிகள் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து உலர்களங்களில் காய வைத்து, விற்பனை செய்து வருகின்றனர்.கிராமங்களில் நேரடியாக வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், விளை பொருட்களை உலர வைக்கும் வகையில் உலர் களங்கள் இல்லை. இதனால், விவசாயிகள் ரோடுகள் மற்றும் பொது இடங்களில் காய வைக்க வேண்டிய அவல நிலை உள்ளது.இது சம்பந்தமாக உலர்களங்களை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் நீண்ட காலமாக வேளாண்துறைக்கும், அரசுக்கும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்னும் இக்கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.எனவே, விவசாயிகள் பயன்பெறும் வகையில், மக்காச்சோளம், சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படும் கிராமங்களில், வேளாண் துறை வாயிலாக உலர் களங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒரு சில கிராமங்களில் உலர் களங்கள் இருந்தாலும், பயன்படுத்த முடியாத அளவிற்கு சிதிலமடைந்து காணப்படுகிறது. அவற்றையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார கிராமங்களில் உலர் களங்கள் அமைக்கவும், பழைய உலர் களங்களை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.