மின் கட்டண சுமையில் விடுபட சாய ஆலைகள் முனைப்பு
திருப்பூர் : புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சுமக்க முடியாத மின்கட்டண சுமையை குறைக்க, திருப்பூர் சாய ஆலைகள் திட்டமிட்டுள்ளன.பின்னலாடை தொழிலின் முக்கிய மதிப்பு கூட்டும் சேவை பணியாக இருப்பது, சாயத்தொழில். திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பின்பற்றி, சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நடந்து வருகிறது.சுத்திகரிப்பின் வாயிலாக, ஒரு சொட்டு கழிவுநீர் கூட வெளியேற்றப்படுவதில்லை. குறிப்பாக, மறுசுழற்சி தொழில்நுட்பத்தால், 90 சதவீத கழிவுநீர், சுத்தமான தண்ணீராக மாற்றி, மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உற்பத்திச்செலவு ஆலைகள் திணறல்
கோர்ட் உத்தரவின்படி, திருப்பூரில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருகின்றனர். சாய ஆலைகளுக்கு, சற்று நிதி சுமையாக இருந்தாலும், இதன் பயனாக ஏற்றுமதியாளர்களுக்கு 'பசுமை உற்பத்தியாளர்' என்ற கவுரவம் கிடைத்துள்ளது. இருப்பினும், உற்பத்தி செலவை கட்டுப்படுத்த முடியாமல், சாய ஆலைகள் திணறிக்கொண்டிருக்கின்றன.திருப்பூர் சாய ஆலைகளின், கழிவுநீர் சுத்திகரிப்பு செலவில், மின்கட்டண செலவு மட்டும், 40 சதவீதம் ஏற்படுகிறது. அரசு திட்டங்கள் பயன்படுத்த முனைப்பு
மத்திய, மாநில அரசு திட்டங்கள் வாயிலாக, மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை செயல்படுத்த சாய ஆலைகள் தயாராகிவிட்டன.சாய ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது:மத்திய அரசின் திட்டத்தில், எரிசக்தி பயன்பாட்டை குறைக்கும், குறு, சிறு நிறுவனங்களுக்கு, மானியம் வழங்கி ஊக்குவிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கூட்டாக முயற்சி செய்யலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.திட்டத்தில், புதிய தொழில்நுட்ப செயல்பாட்டுக்காக, 10 முதல், 15 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வங்கிக்கடன் மீது, 5 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள நிறுவனங்கள், முதலில் விருப்ப கடிதம் கொடுக்க வேண்டும்.கள தணிக்கை நடத்தி, சரியான தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதை உறுதி செய்து, அரசு சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு திட்டம் வாயிலாக, எரிசக்தி பயன்பாட்டை கட்டுப்படுத்த ஆர்வமுள்ள சாய ஆலைகள் குறித்த முன்பதிவு செய்யலாம் என, சங்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.