| ADDED : டிச 27, 2025 06:40 AM
பல்லடம்: பள்ளி வளாகங்களில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்றி அமைப்பதில், கல்வித்துறை, மின் வாரியம் அலட்சியம் காட்டி வருகின்றன. மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளி வளாகங்களில், மின் கம்பங்கள் அமைக்கக்கூடாது; மின் கம்பிகளை பள்ளி வளாகத்தில் கொண்டு செல்லக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. பறவைகள் தாக்குதல், புயல், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றத்தின் போதும், மின் கம்பிகள் உரசி, கம்பிகள் துண்டாகி விழும் வாய்ப்பு உள்ளது. மேலும், மின் கோளாறு காரணமாக, மின் கம்பங்களில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படும் என்பதாலும், மின் கம்பங்கள் அமைக்கவும், மின் கம்பிகளை பள்ளி வளாகங்களில் கொண்டு செல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற தீவிபத்து சம்பவங்களும் பரவலாக நடந்துள்ளன. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. பல்லடம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளி வளாகங்களில், மின்கம்பிகள் செல்வதும், மின் கம்பங்கள் உள்ளதையும் பார்க்க முடிகிறது. ஆனால், இவற்றை அகற்றுவதற்கு, பள்ளிக்கல்வித்துறையும், மின்சார வாரியமும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மின் கம்பங்கள் முறிந்து விடுவது, மின் கம்பிகள் துண்டாவது மற்றும் தீ விபத்து ஏற்படுவது உள்ளிட்ட மின் விபத்துகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், பள்ளி வளாகங்களில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.