உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளி ஜோடிக்கு நிச்சயதார்த்தம்

மாற்றுத்திறனாளி ஜோடிக்கு நிச்சயதார்த்தம்

பல்லடம்; மாற்றுத்திறனாளிகளுக்கு நிச்சயம் செய்து வைத்து, மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை, மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினரை மகிழச் செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் பாலாஜி, 32. மாற்றுத்திறனாளியான இவர், தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். திருப்பூர் அருகே, இடுவாய் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் மகள் வைஷ்ணவி, 27; மாற்றுத்திறனாளி. பாலாஜிக்கும், வைஷ்ணவிக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டினரும் சம்மதித்த நிலையில், போதிய வசதி இன்றி, திருமணத்தை நடத்தவும் வழியில்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த, திருப்பூர் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையினர் இருவருக்கும் நிச்சயம் செய்து வைத்தனர். இது குறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளான பாலாஜி -- வைஷ்ணவிக்கு திருமணம் செய்து வைக்க இவர்களது பெற்றோர் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். ஆனால், இரு குடும்பத்தினருக்கும் போதிய வசதி வாய்ப்பு இல்லாததால், நிச்சயதார்த்தம் செய்யவும் வழியில்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும், இருதரப்பு வீட்டாரின் சம்மதத்துடன், அறிவொளி நகர் முத்துமாரியம்மன் கோவில் மண்டபத்தில், மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில், திருமண நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன், திருமண ஏற்பாடு செய்யப்பட்டு, மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில், 'தாலிக்கு தங்கம்' வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். மாற்றுத்திறனாளி ஜோடிக்கு திருமண ஏற்பாடுகளை செய்த மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் இச்செயல், மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ