| ADDED : மார் 14, 2024 12:04 AM
பல்லடம் : தடையின்மை சான்று வழங்க வலியுறுத்தி, பல்லடம் தாலூகா ஆபீஸ் முன், கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் உன்னிகிருஷ்ணன், மூர்த்தி மற்றும் மா.கம்யூ., கட்சியின் ஒன்றிய செயலாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இது குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம் கிராமத்தில், 293 கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு, கடந்த, 1992ம் ஆண்டு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதற்கு ஒரு தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பட்டா வழங்கலாம் என கோர்ட் உத்தரவு வழங்கியது.இதனையடுத்து குடிசைகள், ஓட்டு வீடுகள் அமைத்து, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு பெற தடையின்மை சான்று வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கையை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், தனி பட்டாவும் வழங்கப்படவில்லை. இங்கு குடியிருப்பவர்களுக்கு தனி பட்டா மற்றும் தடையின்மை சான்று வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.