மக்கள் தொகை அடிப்படையில் குடிநீர் வினியோகிக்க எதிர்பார்ப்பு
பல்லடம்; மக்கள் தொகை அடிப்படையில் குடிநீர் வழங்கப்படாததால், பல்லடம் வட்டாரம் முழுவதும், குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடி வருகிறது. பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி, சாய ஆலைகள், பஞ்சு நுால் மில்கள், விவசாயம் என, பலதரப்பட்ட தொழில்கள் பரவலாக நடந்து வருகின்றன. தொழில்களை சார்ந்து, வேலைவாய்ப்பும் அதிகரித்து வருவதால், பல்லடம் வட்டாரத்தின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப, குடிநீர், ரோடு வசதி, தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டி உள்ளது. இவற்றில், குடிநீர் தேவைதான் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் முதன்மையானதாக உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வினியோகிப்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. ஆனால், பழைய மக்கள் தொகை அடிப்படையிலேயே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதால், பல்லடம் வட்டாரம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அத்திக்கடவு, பில்லுார் கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ் பல்லடம் வட்டாரத்துக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள கரைப்புதுார், ஆறுமுத் தாம்பாளையம், கணபதிபாளையம், ஆறுமுத்தாம்பாளை யம் ஊராட்சிகளுக்கு, கூடுதலாக, மேட்டுப்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாகவும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த, 2011 கணக்கெடுப்பின்படி, 2.45 லட்சம் மக்கள் வசித்தனர். தற்போது, 3.60 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதுதவிர, தொழில், வியாபாரம், வேலை என, பல லட்சம் பேர், சுழற்சி முறையில் வந்து செல்கின்றனர். இதனால், பல்லடம் வட்டாரத்தின் குடிநீர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. குழாய் உடைப்பு, குடிநீர் திருட்டு, முறைகேடான குடிநீர் இணைப்புகள் என, பல்வேறு காரணங்களால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது ஒருபுறம் இருக்க, பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டிய குடிநீரும் கிடைப்பதில்லை. ரியல் எஸ்டேட் வளர்ச்சி காரணமாக, குக்கிராமங்களிலும் குடியிருப்புகள் பெருகி, மக்கள் தொகை பெருகியதால், குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தேவையான குடிநீர் கிடைக்காமல், பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் ரோட்டுக்கு வருவதும், நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்புவதும் வாடிக்கையாகிவிட்டது. தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீரை உயர்த்தி வழங்கினால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும். எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசித்து, மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.