சிதிலமடைந்த தொட்டியை பராமரிக்க எதிர்பார்ப்பு
உடுமலை; பாலப்பம்பட்டி அரசு பள்ளி அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்கதொட்டி, சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சிக்குட்பட்டது பாலப்பம்பட்டி கிராமம். திருமூர்த்திமலை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகத்துக்கான மேல்நிலை நீர்தேக்க தொட்டி பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் பின்புறம் உள்ளது.இந்த தொட்டியின் கட்டமைப்பு சிதிலமடைந்து, பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. அருகிலேயே கிராம நிர்வாக அலுவலகமும் உள்ளது. பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்லும் இடமாகவும், பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பகுதியாகவும் உள்ளது.இதனால் விபத்து ஏற்படும் முன்பு, சிதிலமடைந்துள்ள நீர் தேக்க தொட்டியின் கட்டமைப்பை பராமரிப்பதற்கு, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.