சாலையோரம் வீசப்பட்ட காலாவதி மருந்துகள்
பல்லடம்: தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வீசப்பட்ட காலாவதியான மருந்து பொருட்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரணம்பேட்டை முதல் பல்லடம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வழிநெடுக, காலாவதியான மருந்து பொருட்கள் வீசப்பட்டுள்ளன. இதில், குழந்தை களுக்கு பயன்படுத்தும் மருந்து தான் அதிக அளவில் வீசப்பட்டுள்ளன. காரணம்பேட்டை முதல் பல்லடம் வரை, 12 கி.மீ. துாரத்தில், 50 மீ., துார இடைவெளியில், இவை பரவலாக வீசப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் குவியலாக வீசினால், விசாரணையில் தெரிந்துவிடும் என்பதால், வாகனங்களில் எடுத்துச் சென்று, குறிப்பிட்ட இடைவெளியில் பரவலாக வீசப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவை அனைத்தும் தனியார் நிறுவனத்தின் மருந்து பொருட்கள். அதில், 2022 மற்றும் 2023ம் ஆண்டே காலாவதியானதாக அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலாவதியானதால், தயாரிப்பு நிறுவனங்களால் ரோட்டில் வீசப்பட்டதா, அல்லது மருந்து கடையினர் யாரேனும் வீசி சென்றார்களா என்பது தெரியவில்லை.