உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 5 சதவீத உற்பத்தி மானியம் ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள்

5 சதவீத உற்பத்தி மானியம் ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள்

திருப்பூர்: 'ஏற்றுமதி வர்த்தக இழப்பை தடுக்க, 5 சதவீதம் உற்பத்தி மானியம் வழங்க வேண்டும்,' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், 50 சதவீத வரிவிதிப்பால், அமெரிக்காவுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்து வந்த ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'அரசு விரைந்து நிவாரண உதவி வழங்க வேண்டும்' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதன் தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: அமெரிக்க ஏற்றுமதி பாதிக்கப்பட்டால், உற்பத்தியும் பாதிக்கப்படும். தொழிலாளர் வேலை இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படும். இதுபோன்ற பாதிப்பை தவிர்க்க, மத்திய அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். 'டியூட்டி டிராபேக்', 5 முதல், 10 சதவீதம் வழங்க வேண்டும். அவசரகால கடனுதவியாக, பழைய கடன்களை புதுப்பித்து காலக்கெடு வழங்க வேண்டும். வட்டி சமன்படுத்தும் திட்டத்தில், 5 சதவீத மானிய உதவி வழங்க வேண்டும். அமெரிக்க வரி உயர்வு பிரச்னை தீரும் வரை, அந்நாட்டுக்கு ஏற்றுமதியாகும் ஆடைகளுக்கு, உற்பத்தி மானியமாக, 5 சதவீதம் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கான கடனை, 90 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்; இல்லாதபட்சத்தில், செயல்படாத வங்கி கணக்காக அறிவிக்கப்படுகிறது; இதை, 180 நாட்களாக அதிகரிக்க வேண்டுமென, மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். எங்களுக்கும் பிரச்னை தான்! எக்ஸ்போர்ட் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் நிர்வாகிகள் கூறுகையில், ''திருப்பூரில் இருந்து தினமும், 30 கன்டெய்னர்கள், அமெரிக்க ஏற்றுமதி ஆடைகளுடன் துறைமுகம் சென்றுவரும். கடந்த சில நாட்களாக, இரண்டு அல்லது மூன்று லாரிகள் தான் செல்கின்றன; இனிமேல் அதுவும் இருக்காது. அமெரிக்க ஆர்டருக்குத்தான், தினமும் சரக்கு ஏற்றி சென்று வருவோம். தற்போது, லாரிகள் போக்குவரத்தும் வெகுவாக குறைந்துவிட்டது; டிரைவர் மற்றும் பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். விரைவில், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ