உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழ் கற்றால் புகழ்!

தமிழ் கற்றால் புகழ்!

இப்படியாக, சின்ன சின்ன வரிகளில், சிந்தனையை துாண்டும் ைஹக்கூ கவிதைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தனர், பள்ளி மற்றும் கல்லுாரி, மாணவ, மாணவியர். தாய்த்தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடுகை அது. இலக்கிய காதலர்களின் சங்கமத்தில், தமிழ் மணம் வீச கூடுகை களை கட்டியிருந்தது. தமிழ், அம்மொழி சார்ந்த பேச்சு, கவிதை போட்டி, ஒரு பக்க கதை போட்டி, ஓவியம் மற்றும் ைஹக்கூ போட்டி என, மாதம் ஒரு ஞாயிறு கிழமைகளில், இந்த கூடுகையை ஏற்பாடு செய்து, இப்போட்டிகளை நடத்துகின்றனர் இந்த இலக்கியப் பேரவையினர்.ஆர்வமுள்ள பள்ளி மாணவ, மாணவியர் அதிகளவில் பங்கேற்கின்றனர். அதுமட்டுமின்றி, அந்தந்த துறை சார்ந்து சிறந்து விளங்கும் படைப்பாளிகளையும் வரவழைத்து, தமிழார்வத்தை பட்டை தீட்டும் வகையில், அவர்களின் உரை வீச்சுக்கும் ஏற்பாடு செய்கின்றனர். திறமையில் ஜொலிப்பவர்களுக்கு பரிசும், பாராட்டையும் வழங்குகின்றனர்.''தமிழ், இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், அவர்களுக்கு இலக்கிய உலகில் ஒரு அடையாளத்தை, ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலும் தான், இந்த கூடுகையை நடத்தி வருகிறோம்,'' என்றார், தாய்த்தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் கவிஞர் மீன்கொடி பாண்டிராஜ்.''பள்ளி, கல்லுாரி படிக்கும் இளம் படைப்பாளிகள், இதில் பங்கேற்று, தங்களின் கற்பனை திறனுக்கேற்ப படைப்புகளை வழங்குகின்றனர். சமூக ஊடகங்களின் உதவியால், நாங்கள் நடத்தும் இத்தகைய போட்டி குறித்த பகிர்தல், வெளியூர்களுக்கும் எட்டுகிறது. சென்னை, பெங்களூரு என, வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்தும் கூட, பலரும் படைப்புகளை அனுப்பி வைக்கின்றனர்'' என்று கூடுதல் தகவல் சொன்னார்.இருபது இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் தாய் தமிழை வளர்க்கும் முயற்சியை, அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லவும் திட்டம் வகுத்து வருகின்றனர். இவர்களை போன்று, ஆங்காங்கே தமிழ் வளர்க்கும் நல்லோரின் சிறு முயற்சியால், தமிழ் என்றும் வாழும் என்று சொன்னால், அது மிகையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ