உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி: விற்பனை செய்ய தயங்கும் விவசாயிகள்

சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி: விற்பனை செய்ய தயங்கும் விவசாயிகள்

பொங்கலுார்:கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கான தடை குறிப்பிட்ட சில நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகளுக்கு தொடர்கிறது. வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தான் முழுமையாக தடை விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. உள்நாட்டில் தேவையை விட விளைச்சல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது.ஒரு கிலோ குறைந்தபட்சம் பத்து ரூபாய்க்கும், முதல் தர வெங்காயம் அதிகபட்சமாக, 25 ரூபாய்க்கும் விவசாயி களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.இது உற்பத்திச் செலவுக்கு போதாது என்பதால் அறுவடையை துவக்கிய விவசாயிகள், விற்பனை செய்வதை தவிர்த்து வருகின்றனர். வெங்காயத்தை அறுவடை செய்து அவற்றை உலர்த்தி இருப்பு வைப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.விவசாயிகள் சிலர் கூறியதாவது: கடந்த சீசனில் நல்ல விலை கிடைத்ததால் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய விலைக்கு விற்றால் அசல் கூட தேறாது. அடுத்த மாதத்தில் இருந்து ஏற்றுமதி அதிகரிக்கும். எனவே, கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளதால் இருப்பு வைக்கிறோம்.இந்த சீசன் அதிக வெயில் காலம் என்பதால் நீண்ட நாட்களுக்கு இருப்பு வைக்க முடியாது. விலை அதிகரித்தால் அதைக் கட்டுப்படுத்த ஏற்றுமதி தடை, இறக்குமதி என உடனடி நடவடிக்கையில் இறங்கும் அரசுகள் விலை சரிந்தால் அதை தடுப்பதற்கான நடவடிக்கையையும் உடனுக்குடன் எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும். அரசுகள் உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ