சிறப்பு வேளாண் வளாகம்; விவசாயிகள் அதிருப்தி
திருப்பூர்; தமிழக அரசு அறிவித்தபடி சிறப்பு வேளாண் வளாகங்கள் செயல்பாட்டுக்கு வராததால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.தமிழகத்தில், மண் வளம் மற்றும் பாசன திட்டங்களின் அடிப்படையில், மாவட்ட வாரியாக சில வேளாண் விளைபொருட்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பிரதானமாக சாகுபடி செய்யப்படும், விளைபொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.இடைத்தரகர்கள் இல்லாமல், மாவட்ட வாரியாக சிறப்பு வேளாண் வளாகங்களை துவக்க, தமிழக அரசின் அறிவிப்பு கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியானது; வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக வரித்துறையின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில், இவை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.'திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டியில், தேங்காய்; பொங்கலுாரில் சின்னவெங்காயம் விற்பனைக்காக சிறப்பு வேளாண் வளாகங்கள் துவக்கப்படும்,' என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், இவை செயல்பாட்டுக்கு வரவில்லை.இது விவசாயிகளை அதிருப்திக்குள்ளாக்கியது.