உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பீட்ரூட் சாகுபடியில் மீண்டும் விவசாயிகள் ஆர்வம்

பீட்ரூட் சாகுபடியில் மீண்டும் விவசாயிகள் ஆர்வம்

உடுமலை; உடுமலை பகுதிகளில், பீட்ரூட் சாகுபடியில் மீண்டும் விவசாயிகள் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில், காய்கறி பயிர்கள் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் அப்பகுதி விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், உடுமலை, குடிமங்கலம் பகுதியிலுள்ள கரிசல் மண் பூமிகளில், மலைப்பகுதிகளில் மட்டுமே விளைந்து வந்த, பீட்ரூட் உடுமலை பகுதியில் சாகுபடி செய்து வந்தனர். இது, 60 நாட்கள் என்ற குறுகிய சாகுபடி காலமாக கொண்டதோடு, கூடுதல் வருவாய் கிடைத்ததால், சாகுபடி பரப்பு அதிகரித்தது. கடந்த 4 ஆண்டுக்கு முன், பீட்ரூட் விலை கடும் சரிவை சந்தித்ததோடு, நோய்த்தாக்குதல், நீர்ப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், சாகுபடி பரப்பு குறைந்தது. இந்நிலையில், நடப்பு சீசனில் பருவ மழை அதிகரித்துள்ளதோடு, குளிர் சீதோஷ்ண நிலையும் நிலவுவதோடு, தற்போது பீட் ரூட்டிற்கு சந்தையில், 20 முதல், 30 ரூபாய் வரை விலை கிடைத்து வருவதால், மீண்டும் பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை மேற்கு பகுதி கிராமங்கள் மற்றும் குடிமங்கலத்தில், ஒரு சில பகுதிகளில் பீட்ரூட் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பீட்ரூட் சாகுபடியில் உள்ள தொழில்நுட்பங்கள், பிரச்னைகள், வழிகாட்டுதல் குறித்து, தோட்டக்கலைத்துறையினர் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், விவசாயிகள் கூறியதாவது: பீட்ரூட் சாகுபடியில், மகசூல் மற்றும் வருவாய் கிடைத்து வந்த நிலையில், நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், சாகுபடி பரப்பு குறைந்தது. தற்போது, சீதோஷ்ண நிலை ஏற்றதாக உள்ளதாலும், கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் பீட்ரூட் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில், மழை, குளிர் சீதோஷ்ண நிலை பீட்ரூட் பயிருக்கு ஏற்றதாக உள்ளதால், அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தற்போது, 25 கிலோ கொண்ட ஒரு பை, ரூ.350 வரை சந்தையில் விற்பனையாகி வருகிறது. அறுவடையின் போது, மேலும் விலை கூடும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி