சிபில் ஸ்கோர் நடைமுறை வேண்டாம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்; கூட்டுறவு பயிர்க் கடன் வழங்க சிபில் ஸ்கோர் நடைமுறையை ரத்து செய்ய கோரி, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற சிபில் ஸ்கோர் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்கத்தின் செயல் தலைவர் வெற்றி தலைமை வகித்தார். மாநில தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். இதில், பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கநிர்வாகிகள் கூறியதாவது:விவசாய பயிர்க்கடன்களுக்கு கூட்டுறவு கடன் சங்கங்களில் சிபில் ஸ்கோர் என்ற நடைமுறை தேவையற்றது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். மேலும், இந்த உத்தரவு ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் தாங்கள் பெற்ற பயிர்க்கடன்களை செலுத்தக் கூடாது.இது குறித்து அனைத்து பகுதியிலும் விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் பகுதி வாரியாக பிரசாரம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.