மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரிப்பு விவசாயிகள் அதிர்ச்சி
உடுமலை: தென்னை ஓலைகளில் பச்சையத்தை சுரண்டி அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை ஈ தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளதால், குடிமங்கலம் வட்டார விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இவ்வட்டாரத்தின் நிகர சாகுபடி பரப்பான, 22 ஆயிரம் ெஹக்டேரில், 15 ஆயிரம் ெஹக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நீண்ட கால பயிராக பராமரிக்கப்படும் தென்னையில், தொடர் நோய்த்தாக்குதலால், இந்த வட்டார விவசாயிகள் அதிகம் பாதித்துள்ளனர்.மூங்கில்தொழுவு சுற்றுப்பகுதியில், கேரள வாடல் நோய் பரவி, ஆயிரக்கணக்கான மரங்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த தாக்குதல் அனைத்து பகுதிகளிலும் பரவி வருகிறது.இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், தென்னை மரங்களை அதிகம் பாதித்த, வெள்ளை ஈ தாக்குதல் மீண்டும் இப்பகுதியில் வேகமாக பரவி வருகிறது.பருவமழை இடைவெளி விட்டு, பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், வெள்ளை ஈக்கள், தென்னை ஓலையின் அடிப்பகுதியில், முட்டையிட்டு வருவதுடன், பச்சையத்தையும் சுரண்டி வருகின்றன.அதிவேகமாக, ஆயிரக்கணக்கான மரங்களுக்கு பரவும் வெள்ளை ஈக்களுக்கு உண்டு. இதனால், விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.வெள்ளை ஈ தாக்குதலால், தென்னை மரங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்; ஓலைகள் கருப்பு நிறமாக மாறுவதுடன், காய்ப்புத்திறன் முற்றிலுமாக குறைந்து விடும்.வறட்சிக்கு பிறகு வாடல் நோய் தாக்குதலை எதிர்கொண்ட விவசாயிகள் மீண்டும், வெள்ளை ஈயை கட்டுப்படுத்த செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இவ்வகை நோய்த்தாக்குதல் குறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்து, நோய்த்தடுப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.