பூசாரிநாயக்கன் குளத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம் முழுமையாக வழங்கவில்லை; விவசாயிகள் அதிருப்தி
உடுமலை: உடுமலை அருகேயுள்ள ஆலாம்பாளையம் குளத்திற்கு, திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறப்பு நேற்று காலை நிறுத்தப்பட்டது. திறக்கப்பட்ட நீரின் அளவு குறைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில், 76 ஏக்கர் பரப்பில், அமைந்துள்ள பூசாரிநாயக்கன் குளம், சுற்றுப்புறத்திலுள்ள குறிச்சிக்கோட்டை, மடத்துார், குரல்குட்டை, மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி என பல்வேறு கிராமங்களுக்கு, நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இக்குளத்துக்கு முன்பு, மழை நீர் ஓடைகள் வாயிலாக, திருமூர்த்தி பாலாறு வழியாக நீர் வரத்து கிடைத்து வந்தது. திருமூர்த்தி அணை, பி.ஏ.பி., திட்டம் உருவாக்கப்பட்டதால், குளத்திற்கு நீர்வரத்து முற்றிலும் தடைபட்டதால், இக்குளம் பி.ஏ.பி., திட்டத்தின் துணை அமைப்பாக சேர்க்கப்பட்டு, ஆண்டுக்கு, 39.86 மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு உத்தரவும், உயர் நீதிமன்ற உத்தரவும் உள்ளது. நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்து, குளம் வறண்டு காணப்பட்டதால் நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்திய நிலையில், கடந்த, 22ம் தேதி முதல், 25ம் தேதி வரை திருமூர்த்தி அணையிலிருந்து, 20 மில்லியன் கனஅடி நீர், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், 22ம் தேதி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு மானுப்பட்டி கால்வாயிலிருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அரசு உத்தரவு அடிப்படையில், முழுமையாக நீர் வழங்காமல், குறைந்தளவு நீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில், 20 மில்லியன் கனஅடி நீர் திறப்பதற்கு பதில், 17 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.