உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தென்னை நார் தொழிற்சாலைகளால் பாதிப்பு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

 தென்னை நார் தொழிற்சாலைகளால் பாதிப்பு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை: உடுமலை அருகே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்படும், தென்னை நார் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை கோட்டாட்சியர் குமாரிடம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், மடத்துக்குளம் தாலுகா தலைவர் ராஜரத்தினம், செயலாளர் வீரப்பன், பொருளாளர் வெள்ளிங்கிரி மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர். மடத்துக்குளம் தாலுகா, மைவாடியில் ஐந்து தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்படும் இந்த ஆலைகளால், அருகில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர். தென்னை நார் தொழிற்சாலைகளில், திப்பிகளை, விவசாய நிலங்களில் மண்ணில் நேரடியாக பரப்பி, நீர் அடித்து துாய்மைப்பணியில் ஈடுபடுகின்றனர். இதனால், கழிவு நீர் நேரடியாக நிலத்திற்குள் இறங்கி, சுற்றுப்புறத்திலுள்ள விவசாய கிணறுகள், ஆழ் துளை கிணறுகளில், நிறம் மாறியும், துர்நாற்றத்துடனும் நீர் மாறியுள்ளது. இதனால், இந்த நீரை பொதுமக்களும், கால்நடைகளும் அருந்த முடியாத நிலை உள்ளது. மேலும், தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் கழிவு நீரை முறையாக சுத்திகரிக்காமல், அருகிலுள்ள நரசிங்க பெருமாள் கோவில் நிலத்தில் நேரடியாக விடுகின்றனர். திறந்த வெளியில் தென்னை நார் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்திய கழிவு நீரை நேரடியாக, ஓடைகளில் வெளியேற்றும் நிலையில், இந்த கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலந்து, குடிநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள அமராவதி ஆற்றின் நீரும் மாசுபடுகிறது. சுற்றிலும், பி.ஏ.பி.,பாசனம், அமராவதி புதிய ஆயக்கட்டு மற்றும் இறவை பாசனத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில், தென்னை, கரும்பு, நெல், காய்கறி பயிர்கள் விவசாயிகள் சாகுபடி செய்து வரும் நிலையில், மண், நிலத்தடி நீர் மாசுபடும் வகையிலும், காற்றில் கலக்கும் மஞ்சி துகள்கள் காரணமாகவும், கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகள் குடிநீர் ஆதாரத்தை காப்பாற்றும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், போதிய பாதுகாப்பு வழிமுறைகள் செய்யாமல் இயங்கி வரும் தென்னை நார் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து, அவை இயங்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ