உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புலிகள் காப்பகத்தில் கட்டண வசூல் ஜோர்... இதெல்லாம் நியாயமில்லை!சூழல் சுற்றுலா திட்டம் முடங்கியும் கொர்

புலிகள் காப்பகத்தில் கட்டண வசூல் ஜோர்... இதெல்லாம் நியாயமில்லை!சூழல் சுற்றுலா திட்டம் முடங்கியும் கொர்

உடுமலை;ஆனைமலை புலிகள் காப்பத்தில், சூழல் சுற்றுலா திட்டங்கள் முடங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணியர் செல்ல வாகனங்களுக்கு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவது, அதிருப்தியை ஏற்படுத்தியள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. அடர் வனம், யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு, உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள், அரிய வகை பறவைகள் என பல்லுயிரினங்களின் வாழ்விடமாகவும், வனத்தில் ஓடைகள், காட்டாறுகள் என அற்புதமான சூழல் மண்டலமாக உள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவர்களுக்கு இயற்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், வனம் மற்றும் வன விலங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்,வனத்தை ஆதாரமாகக்கொண்டு வாழும் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா திட்டம் துவக்கப்பட்டது.

சுற்றுலா மையம்

இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, அமராவதி வனச்சரகம், சின்னார் வனப்பகுதியை சிறந்த சூழல் சுற்றுலா மையமாக அமைக்கப்பட்டது.சின்னாறில் துவங்கி, சின்னாறு, காட்டாறு வரை, வனத்திற்குள், 5 கி.மீ., துாரம், வன விலங்குகள், பறவைகள் மற்றும் பசுமையை ரசித்துக்கொண்டு, நடைப்பயணம், கூட்டாற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.இதற்காக, சின்னாறு மற்றும் தளிஞ்சியில், முழுவதும் இயற்கை சூழலில், மலைவாழ் மக்கள் மரபு கட்டடம் உள்ளிட்டவற்றுடன், சூழல் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.தொடர்ந்து, திட்டம் படிப்படியாக விரிவு படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதோடு, சின்னாறு பகுதியில் அறைகள், உயரத்தில் இருந்து விலங்குகளை ரசிக்கும் வகையில் பல இடங்களில் காட்சி மாடங்கள் அமைக்கப்பட்டன.ஆனால், சூழல் சுற்றுலா திட்டம் துவங்கிய ஒரு சில மாதங்களில், முடங்கியதோடு, இதற்காக அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் முழுவதும் வீணாகியது. கூட்டாற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள வாங்கிய பரிசல் அனைத்தும், செக்போஸ்ட் பகுதியில் சிதிலமடைந்து காணப்படுகிறது.ஆனால், சிறிது துாரத்தில் அமைந்துள்ள, கேரளா மாநிலம் சின்னாறு பகுதிகளில், அம்மாநில வனத்துறையால், சூழல் சுற்றுலா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

கண்காணிப்பு இல்லை

தமிழக பகுதியில், சூழல் சுற்றுலாவில் முதல் கட்ட திட்டமே அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், முடங்கியுள்ளது.இந்நிலையில், சுற்றுலா திட்டத்தின் ஒரு பகுதியாக, உடுமலை - மூணாறு ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு, பைக் உள்ளிட்டவற்றுக்கு, 20 ரூபாய், கார், ஜீப் ஆகியவற்றுக்கு, ரூ.50, பெரிய அளவிலான சுற்றுலா வாகனங்களுக்கு, ரூ.100 என, கடந்த, ஏழு ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.மாதம் தோறும் பல லட்சம் ரூபாய், வனத்துறை வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து வரும் நிலையில், இத்திட்ட நிதியின் கீழ் மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளவில்லை.இந்த ரோட்டில் செல்லும் சுற்றுலா பயணியருக்கு, கழிப்பறை, குடிநீர் என எந்த அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை. வனத்துறையினர் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை.ரோட்டில் செல்லும் சுற்றுலா பயணியர், காடுகளில் வீசி செல்லும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சேகரிக்க, பேட்டரி குப்பை சேகரிப்பு வாகனம் வாங்கப்பட்டது.அதுவும் இயக்கப்படாமல் உள்ளது. இந்த ரோட்டில் தமிழக பகுதி வனத்திற்குள் கழிவுகள் அதிகளவு காணப்படுகிறது.அதே போல், வனத்திற்குள் அமைந்துள்ள, கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இங்கு செல்லும் பக்தர்களிடமும், வாகன கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இங்கும் முறைகேடுகள் நடந்து வருகிறது.கட்டணம் மட்டும் வசூலிக்கும் வனத்துறையினர், வனத்தை காக்கும் வகையிலும், சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில் சூழல் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் வனத்தையும், வன விலங்குளையும் காக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ