கலெக்டர் தலைமையில் அரசு திட்டங்கள் கள ஆய்வு
உடுமலை,; உடுமலை தாலுகாவில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடந்தது.மாவட்ட கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழு, கிராமங்களில் முகாமிட்டு அரசு திட்டங்கள் செயல்பாடுகள் ஆய்வு மற்றும் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்ட முகாம், நேற்று உடுமலை தாலுகாவில் நடந்தது.திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மாவட்ட அளவிலான அரசு துறை அதிகாரிகளுக்கு கிராமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், வேளாண்துறை, கூட்டுறவு சங்கங்கள், ஊராட்சி அலுவலகங்கள், வி.ஏ.ஓ., அலுவலம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசு திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்தில், கள ஆய்வு கருத்துக்கள் மீது ஆய்வுக்கூட்டம் நடந்தது. தாலுகா அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.இன்று காலை, திடக்கழிவு மேலாண்மை, சுகாதார பணிகள், குடிநீர் வினியோகம், காலை உணவு திட்டம், பால் உற்பத்தியாளர் சங்கங்களில், கள ஆய்வு பணி நடக்கிறது.