பாயும் லஞ்சம் l வீட்டு மனை வரன்முறையில்... l கிடப்பில் விண்ணப்பங்கள்
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், ஊராட்சி பகுதிகளில், தனி மனை வரன்முறை கோரும் விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பணிச்சுமையைக் காரணமாக கூறி, லஞ்சத்தை எதிர்பார்த்துதான் இவை கிடப்பில் போடப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.தமிழக அரசின், நகர்ப்புற வளர்ச்சித்துறையின், நகர் ஊரமைப்புத்துறை வழிகாட்டுதலின்படி, 2016 அக்., 20ம் தேதிக்கு பிறகு, முறையான அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளை மட்டுமே விற்க முடியும். அதற்கு முன்னதாக கிரயம் செய்ய வீட்டுமனைகளில், தனிமனை உரிமையாளர் உரிய கட்டணங்களை செலுத்தி, வரன்முறை செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டது.அங்கீகாரம் பெறாத மனைகள் பிரிக்கப்பட்டு, விற்கப்படவில்லையெனில், மீண்டும் புதிய விதிமுறைகளின்படி மறுசீரமைப்பு செய்த பின்பே, விற்க முடியும். ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.5000 வரை வசூல்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் வளர்ச்சி கட்டணம் மற்றும் மனை அங்கீகார கட்டணம் ஆகியவற்றை, வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தி, மனை அங்கீகாரம் பெற அறிவுறுத்தப்பட்டது.கூர்ந்தாய்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் ஊராட்சி பகுதி மனை உரிமையாளர், சதுர மீட்டருக்கு, 77.50 ரூபாய் வீதம் கணக்கிட்டு செலுத்த வேண்டும். வங்கிக்கணக்கில் கட்டணத்தை செலுத்தி, 'சலான்' இணைக்கப்பட்ட விண்ணப்பம் வழங்கினாலும், மாதக்கணக்கில் கிடப்பில் போட்டு வைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.அலுவலர்கள் சிலர், பல்வேறு நிர்வாக செலவு களுக்கும், உயர் அதிகாரிகளை 'கவனிக்கவும்' வசதியாக, லஞ்சம் பெற முற்படுகின்றனர். வீட்டுமனைகளின் பரப்பளவை பொறுத்து, ஒரு விண்ணப்பத்துக்கு, 2,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'விண்ணப்பத்தில் குறை' மக்கள் அலைக்கழிப்பு
ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:மனை வரன்முறை செய்திருந்தால் மட்டுமே, வீடு கட்டுவதற்கான கட்டட உரிமம் பெற முடியும். வங்கியில் வீட்டுக்கடன் பெற முடியும். அனைத்து வகையான ஆவண நகல்களுடன், ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறோம்.இடைத்தரகராக செயல்படும் நபர்கள் தலையீட்டால், ஒரு விண்ணப்பத்துக்கு 5000 ரூபாய் வரை கொடுத்தால் மட்டும், விரைவாக மனை வரன்முறை செய்து வழங்குகின்றனர்.விண்ணப்பத்தில் குறை உள்ளதாக கூறி அலைக்கழிக்கின்றனர். ஆய்வு நடத்தி, முறைப்படுத்த வேண்டும்.